ADVERTISEMENT

ரவுடி கல்லால் அடித்து கொலை; தந்தை, மகன்கள் உள்பட 4 பேர் கைது! 

10:44 AM Jun 02, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

யோகேஸ்வரன்

ADVERTISEMENT

சேலத்தில், முக்கிய ரவுடியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் அரிசிபாளையம் அவ்வை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரொட்டி என்கிற யோகேஸ்வரன் (27). இவருடைய கூட்டாளி, பிரபாகரன். இருவரும் முக்கிய ரவுடிகள். இவர்கள் இருவரும் மே 30ம் தேதி இரவு, அவ்வை மார்க்கெட் பகுதியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரவி (50) என்பவர் அங்கு வந்துள்ளார். இவருக்கும், பிரபாகரனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது யோகேஸ்வரன், தனது நண்பருக்கு ஆதரவாக ரவியை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரவி கத்தி கூச்சல் போட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு நிகழ்விடத்திற்கு அவருடைய மகன்கள், உறவினர்கள் ஓடிவந்தனர். ரவியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேநேரம், உறவினர்கள் ஒன்று சேர்ந்து யோகேஸ்வரனையும், பிரபாகரனையும் கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில், பலத்த காயம் அடைந்த யோகேஸ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயங்களுடன் தப்பி ஓடிய பிரபாகரன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்து சென்றனர். யோகேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவி

கொல்லப்பட்ட யோகேஸ்வரனின் கூட்டாளியான ரவுடி பிரபாகரன், கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு, புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அரிசிபாளையம் சின்னப்பன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், விஜயகுமார் தனக்கு உரிய மரியாதை தரவில்லை எனக்கூறி, அவரை பிரபாகரன் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவரை காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


பிணையில் வெளியே வந்த அவர், தான் கைது செய்யப்பட்டதற்கு ரவிதான் காரணம் எனக்கருதினார். இதனால் அவரை கொலை செய்யும் திட்டத்துடன் இருந்தார். அதன்படி, மே 30ம் தேதி இரவு, ரவியை தீர்த்துக்கட்டும் நோக்கத்துடன் யோகேஸ்வரனை உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட களேபரத்தில்தான் ரவி, அவருடைய மகன்கள் ராகுல், பாரதி, ரவியின் தம்பி ரஞ்சித் ஆகியோர் யோகேஸ்வரனை கல்லால் அடித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.


ரவுடயை கல்லால் அடித்துக் கொன்றதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரவி மற்றும் அவருடைய மகன்கள், தம்பி ஆகிய 4 பேரை வியாழக்கிழமை (ஜூன் 1) கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT