ADVERTISEMENT

"தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் செய்ய காலியிடங்களில் கூரை அமைக்கப்படும்"- அமைச்சர் சக்கரபாணி பேட்டி!

01:38 PM May 22, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதலைச் செய்து வருகிறது தமிழக அரசு. அதேபோல், டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு நேரடியாக கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 574 நிரந்தர நேரடி கொள்முதல் நிலையங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2,932 கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க போதிய வசதி இல்லை. அதன் காரணமாக மழையில் நெல் மூட்டைகள் நனைந்தும் சேதமடைந்தன. மேலும் பல ஊர்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தும் செயல்படுத்த முடியாத சூழ்நிலையும் இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், வருகிற மே 24- ஆம் தேதி தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகத் திறக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த சில நாட்களாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வந்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, "தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கோயிலுக்குச் சொந்தமான காலி இடங்களில் கூடிய விரைவில் கூரை அமைக்கப்பட்டு, அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் வரை புறம்போக்கு நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களையும் அடையாளங்கண்டு, தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT