ADVERTISEMENT

சேவை செய்ய வந்த இடத்தில் கொள்ளை; சிக்கிய செவிலியர், ஸ்விக்கி டெலிவரி பாய்

09:05 AM May 11, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதிய பெண் ஒருவரை கவனிக்க செவிலியராக சென்ற பெண் தன் ஸ்விக்கி டெலிவரி நண்பருடன் சேர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து போலீசில் சிக்கிய சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் மதுரகவி (85) ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளரான இவர் தனது மனைவி சுந்தரவல்லி என்பவருடன் குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வந்தார். மேல் தளத்தில் அவரது மகன் மற்றும் மருமகள் வசித்து வந்தனர். மதுரகவியின் மருமகள் செங்கல்பட்டு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். இந்நிலையில் மதுரகவியின் மனைவி சுந்தரவல்லிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாகவே வீட்டில் வைத்து அவருக்கு மருத்துவம் பார்த்து வந்தனர்.

இதற்காக சுழற்சி முறையில் தனியார் ஏஜென்சி மூலம் செவிலியர்களை பணியமர்த்தியிருந்தனர். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி மதுரகவி வீட்டில் பீரோவில் இருந்த 185 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக மதுரகவி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். தொடர்ந்து குமரன் நகர் காவல் ஆய்வாளர் மணிமாலா வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் சுந்தரவல்லியை கவனித்து வந்த செவிலியர்களில் ஒருவரான தேவி என்பவர் திடீரென பணியில் இருந்து நின்றது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தேவியிடம் விசாரணை நடத்த அவரது மொபைலுக்கு கால் செய்தனர். ஆனால் அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் கொடுத்திருந்த முகவரியில் சென்று பார்த்த பொழுது அது போலியான முகவரி என்பதும் தெரிய வந்தது. தேவியின் மொபைல் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட முறை தேவியின் மொபைல் போனிலிருந்து ஸ்விக்கி டெலிவரி பாய் ஜெகநாதன் என்பவருக்கு கால் சென்றிருப்பது தெரியவந்தது. அந்த செல்போன் நம்பரை கண்டுபிடித்த போலீசார் விழுப்புரம் அருகே தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த தேவியையும் ஸ்விக்கி டெலிவரி பாய் ஜெகநாதனையும் கைது செய்தனர்.

இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் திட்டமிட்டு பணம், தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது. கடந்த ஐந்தாம் தேதி இருவரும் திட்டமிட்டு நகை மற்றும் பணத்தை திருடி விட்டு போலீசில் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக திண்டுக்கல், மதுரை, திருச்சி, விழுப்புரம் ஆகிய பல்வேறு இடங்களில் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஜெகநாதன் அடையாறில் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் டிவி ஸ்பீக்கரை தட்டிய போது உள்ளே நகை, பணம் இருந்தது தெரியவந்தது. அதில் 207 சவரன் நகைகள் இருந்ததாகவும், 30000 ரூபாய் ரொக்கம் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 185 சவரன் நகை கொள்ளைபோனதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் 207 சவரன் நகைகள் மீட்கப்பட்டதால் வேறு சில இடங்களிலும் இவர்கள் கொள்ளை அடித்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT