/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-web_2.jpg)
தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் தெற்கு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா(62). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் 50ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளைத் திருடியுள்ளார். அதன் பின்னர் வாசலில் நின்றுகொண்டிருந்த கருப்பையாவின் காரை பயன்படுத்தித் தப்பிச் சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மறுநாள் காலை கருப்பையாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கருப்பையா பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் தேவசகாயமேரி தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கருப்பையாவின் செல்போனுக்கு பாஸ் டேக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கருப்பையாவின் கார் கடந்து இருப்பதாக பாஸ்டேக் விவரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு உஷாரான கருப்பையா உடனடியாக பீர்க்கன்கரணை காவலர்களுக்குத் தகவல் அளித்தார். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் கருப்பையாவின் கார் பதிவெண்ணை விக்கிரவாண்டியை அடுத்துள்ள சுங்கச் சாவடிகளுக்குத் தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி டோல்கேட்டை தாண்டியதும் கொள்ளையன் உஷாராகி பாஸ்டேக் ஸ்டிக்கரை கிழித்து எறிந்துள்ளான். கார் பதிவெண்ணை வைத்துப் பிடிக்க முயன்ற காவலர்கள் அதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையன் தடுப்புகளை மோதி தப்பிச் சென்றுள்ளார். அதன்பின்பு சமயபுரத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடி அருகில் கொள்ளையனின் காரை மடக்கிப் பிடிப்பதற்காகச் சாலையில் வாகனங்களை நிறுத்தி காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
காவலர்களைக் கண்டதும் காரை நிறுத்துவிட்டுத் தப்பி கொள்ளையன் சென்றுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் கொள்ளையனை சுமார் 2கிலோமீட்டர் தூரம் வரைக்குச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து பீர்க்கன்கரணை காவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து கொள்ளையனைப் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டது 19வயது மதிக்கத்தக்க வினோத்குமார் என்பதும் அவர் சென்னை படப்பை கரசங்காய் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. வினோத்குமாரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 15ஆயிரம் ரொக்கப்பணம், 2மோதிரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த திருட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா? எனத் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதே போல் திருட்டில் ஈடுபட்ட இளைஞனைப் பிடிப்பதற்கு விரைந்து செயல்பட்ட காவல்துறையினருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)