ADVERTISEMENT

''இசையால் மருந்திட்டவர்... இது அவருக்கு சரியான அங்கீகாரம்''-பாமக அன்புமணி வாழ்த்து!

10:25 PM Jul 06, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. பல்வேறு தரப்பிலிருந்து இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளை இளையராஜாவுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களை இசையால் வென்ற இளையராஜா இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.

இசையால் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர். இந்திய மக்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஆற்றுப்படுத்தியவர். இது அவருக்கு சரியான அங்கீகாரம். அவர் இன்னும் உயர்ந்த அங்கீகாரங்களை பெறத் தகுதியானவர். அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்பட எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், கல்வியாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி சிறக்கட்டும்'' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT