ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல்களில் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் தி.மு.க வில்சன் வலியுறுத்தல்!  

06:21 PM Mar 29, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று (29/03/2022) பேசிய தி.மு.க. எம்.பி.யும் வழக்கறிஞருமான வில்சன், உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக பல தகவல்களை பதிவு செய்தார்.

இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசும்போது, ’’உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1992- ல் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், 28 ஆண்டுகளாகியும் அந்த இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. கடந்த 2011- ஆம் ஆண்டு 15- வது மக்களவையில் எஸ்.சி./ எஸ்.டி. வகுப்பினரைத் தவிர அனைத்து சாதிகளின் அடிப்படையில் சமூக, பொருளாதார சாதி வாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பு நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 4893.60 கோடி ரூபாயை ஒன்றிய அரசு செலவிட்டது.

அதன்படி நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் தரவுகள் 2015-ல் ஒன்றிய அரசால் சேகரிக்கப்பட்டன. பிரதமர் தலைமையில் இயங்கும் அமைச்சரவை குழு மற்றும் நீதி ஆயோக்கின் கீழ் செயல்படும் நிபுணர் குழு ஆகியவற்றின் மூலமாக குறைகளை கண்டறிவதற்கு சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட முடிவு செய்தது. ஆனால் இன்று வரை அந்த குழுக்களை செயல்பட அனுமதிக்கவில்லை.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் கள தரவுகள் கிடைக்கும் போதும், அதற்கென அமைக்கப்படும் ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்கும் போதும்தான் உள்ளாட்சி தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வருப்பினருக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலை, அரசியலமைப்பில் ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி விட்டது.

இதற்கிடையே, 20/12/2021 அன்று ஒன்றீய அரசு வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், இதரப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அனுமதிப்பது குறித்து ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்திருந்தும் இன்று வரை தாக்கல் செய்யவில்லை.

ஒருபுறம், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசியலமைப்பு இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. ஆனால், மறு புறம் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை. இதனால் கள தரவுகளை மாநிலங்களால் பெற முடியவில்லை. கள தரவுகள் இல்லாததால் மாநிலங்களின் இடஒதுக்கீட்டு கொள்கைகளை நீதிமன்றங்கள் புறந்தள்ளுகின்றன. இப்படி புறந்தள்ள வேண்டுமென்பதுதான் ஒன்றிய அரசின் குறிக்கோளா?

அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை V11 -ன் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளால் அதைச் செய்ய முடியாது. எனவே, பிரதமர் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சாதி வாரியாக 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை மாநிலங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் (அல்லது) அரசமைப்புச் சட்டம் 342 A (3) -ன் படி மாநில அரசுகள் சேகரிக்கும் கள தரவுகளின் அடிப்படையில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டம் 243 (D) (6) மற்றும் 243 (T) (6) ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் ‘’ என்று ஆவேசமாகப் பேசினார் வழக்கறிஞர் வில்சன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT