ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேசன் கடை ஊழியர்கள்!

06:10 PM Dec 20, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில், மாநிலம் முழுக்க 20ந்தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மேசப்பன் முன்னிலை வகித்தார். அவர்களின் கோரிக்கைகளான, ‘தமிழகம் முழுவதும் உள்ள (ரேசன் கடை) நியாய விலைக்கடைகளில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் அரசு சார்பில் ரேசன் அட்டை தாரர்களுக்கு விநியோகிக்க வழங்கப்படும் பொருட்களை தனித்தனியாக பேக்கிங் செய்து வழங்க வேண்டும்.

தொடக்க கூட்டுறவு சங்கங்களில் அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதல் பொறுப்பாக கவனித்து வருபவர்களுக்கு 30சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்று தர வேண்டும். சங்கங்களில் 2020-2021ம் ஆண்டிற்கான இறுதி தணிக்கை முடிவுற்ற நிலையில், அதற்கான தணிக்கை அறிக்கையை காலதாமதமின்றி வெளியிட வேண்டும். சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணிவரன்முறை செய்து, பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும்.

அரசு நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் 1-11-2021ம் தேதி வரை வட்டி வழங்குவதாக தெரிவித்ததை, தள்ளுபடி தொகை விடுவிக்கும் நாள் வரை சங்கங்களுக்கு வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்களுக்கு கரோனா காலத்தில் ரேசன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டதற்கு, முதன்மை சங்கங்களில் இருந்து விளிம்புத்தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது குறித்து மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னிச்சையாக ஆண்டு இலக்கு நிர்ணயித்து, அதனை அடைய நிர்பந்தம் செய்து பணியாளர்களை அதிகாரிகள் ஒருமையில் பேசி வருவதை தடுத்து, பணியாளர் நலன் பாதுகாத்திட வேண்டும்.

பயிர்கடன் வழங்குவதில் மாநில அளவில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்’என்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஈரோடு கலெக்டர் அலுவலகம் சென்று அவர்களின் கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினார்கள். மேலும், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற ஜனவரி 5 ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT