ADVERTISEMENT

முழு ராணுவ மரியாதையுடன் விதைக்கப்பட்டார் பழனி!

09:48 AM Jun 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


லடாக் பகுதியில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பதால், உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் பூத உடல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, முப்படை வீரர்களின் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தங்களது எல்லைப் பகுதியினையொட்டி சாலைகளும், விமானத் தளங்களையும் கட்டமைப்பு செய்து வரும் இந்தியாவினை எதிர்க்க, சமீபத்தில் தனது எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவித்த சீனாவிற்குப் போட்டியாக இந்தியாவும் ராணுவத்தைக் குவித்தது. போர்ப் பதற்றம் தொற்றிய நிலையில், ராணுவ மட்டத்திலான இரு தரப்பு உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தையினை தொடங்கினர்.


எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய தரப்பினை சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 நபர்கள் சீனா ராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட செய்தி வெளியானது. வீரமரணமடைந்த வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகனான பழனியும் ஒருவர். கடந்த 22 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்த வீரமரணமடைந்த பழனியின் பூத உடலை, சொந்த ஊரிலேயே நல்லடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது உறவினர்களின் விருப்பம் என்பதால், நேற்றைய தினம், நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தினை ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வீரராகவ் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இவ்வேளையில், வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் பூத இடல் மதுரை விமான நிலையத்தை வந்தடைய, மதுரை பாராளுமன்ற எம்.பி.வெங்கடேசன், எம்.எல்.ஏ.சரவணன் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் பழனியின் உடலை வரவேற்று, அஞ்சலி செலுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

திருவாடனை தாலுகா, திருப்பாலைக்குடி காவல் எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தில், குறிப்பிட்ட இடத்தில் ராணுவ வீரர் பழனியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட, ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. இறுதியாக முப்படை வீரர்கள் கலந்து கொள்ள, முழு ராணுவ மரியாதையுடன் வீர மரணமடைந்த பழனியின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, பழனியின் மேல் போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி பழனியின் மனைவி வானதி தேவி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதே வேளையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.20 லட்சமும் பழனியின் மனைவியிடம் வழங்கப்பட்டது. தேசப்பற்று மிகுந்த பழனி புதைக்கப்படவில்லை எல்லோரது மனதில் விதைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் அக்கிராம மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT