ADVERTISEMENT

வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தி.மு.க ஆதரிக்கிறதா? ராமதாஸ்

03:29 PM Apr 23, 2018 | rajavel


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ADVERTISEMENT

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு யாருடைய உரிமையையும், சலுகையையும் பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, ‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவிகளை சுரண்டவோ, பழிவாங்கவோ பயன்படுத்தக்கூடாது. இந்தச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, முதல்கட்ட விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட வேண்டும். முன்பிணை பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்’’ என்றும் தான் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியதுடன், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்; வன்கொடுமைச் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிடாதவாறு அதை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று திமுகவின் செயல்தலைவர் தம்பி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மறுபுறம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பாவிகள் பழிவாங்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் வழங்கப்பட்ட தீர்ப்பை எந்த அடிப்படையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர்க்கின்றன என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்டத்திலும் எதிர்க்கவில்லை. அதேபோல், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அந்த சட்டம் தான் பாதுகாப்பு என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம், அவர்கள் அல்லாத 81 விழுக்காடு மக்களை மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது. உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய கத்தி, உயிரை பறிப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. இந்த நிலைப்பாட்டில் அதிமுகவும், திமுகவுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


அவ்வாறு இருக்கும் போது, அப்பாவிகள் பழிவாங்கப்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை திமுகவும், அதிமுகவும் எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து, இன்று வரையிலான 30 ஆண்டுகளில் அச்சட்டத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களே ஆதாரம்.

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு ஆயிரம் உதாரணங்களை கூற முடியும். 2010 ஆண்டு திமுக ஆட்சியின் போது, சேலம் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே நடந்த மோதல் தொடர்பாக, அப்போது சென்னையில் இருந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் இது குறித்து அவர் முறையிட்ட போது, குறுக்கிட்டுப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கலைஞர், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது உண்மை தான் என்றும், திமுக மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சுரேஷ் ராஜன் மீதே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

திமுக செயல்தலைவர் தம்பி ஸ்டாலினுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் அவர்களது கட்சி நிர்வாகிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2014-ஆம் ஆண்டில் திமுகவில் குழு மோதல் உச்சத்தில் இருந்தது. அப்போது கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, பகுதி செயலர் ஜெயராமன் ஆகியோர் தங்களை சாதியின் பெயரால் திட்டியதாகக் கூறி, மு.க. அழகிரி ஆதரவாளர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தனர். அதன்படி ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திமுக தலைமை, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி பொய்வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு காரணமான அழகிரி ஆதரவாளர்கள் எம்.எல்.ராஜ், அசோக்குமார், ராஜேந்திரன், முத்துவேல், வெள்ளையன் ஆகிய 5 பேரை கட்சியிலிருந்து நீக்கி 21.01.2014 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

அடுத்த சில நாட்களில் அதாவது 24.01.2014 அன்று மு.க. அழகிரியை திமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,‘‘மதுரை மாவட்டத்தில் திமுக தோழர்கள் சிலர் மீது, பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க துணை போகின்றனர். இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து குழப்பம் விளைவிக்க முயன்ற தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ என்று கூறப்பட்டிருந்தது. இத்தனை ஆதாரங்களுக்குப் பிறகும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று தம்பி ஸ்டாலினால் கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது பொய் என்பதை அவரே அறிவார்.

அரசியல்வாதிகள், அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைக் கடந்து நாடு முழுவதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை எதிர்த்து தான் மராட்டிய மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரை மொத்தம் 57 இடங்களில் மராத்தா மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். இவற்றில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிறைவாக 09.08.2017 அன்று மும்பையில் நடைபெற்ற நிறைவுப் பேரணியில் 23 லட்சம் பேர் பங்கேற்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியையே இது காட்டுகிறது.

பட்டியலின, பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடுப்பதும், அது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்துவதும் முக்கியமாகும். அதற்கு மாறாக, ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் திமுகவும், அதிமுகவும் அப்பாவி மக்களை பழிவாங்குவதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா? என்பதை அக்கட்சியின் தலைமைகள் விளக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக, ஒரு சார்பாக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை விரைவில் வழங்குவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT