Ramadoss condolence to Mathaiyan

வீரப்பனின் கூட்டாளியான மீசை மாதையன் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Advertisment

மீசை மாதையன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், “பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் கர்நாடக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மீசை மாதையன் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவம் அளித்தும் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

மீசை மாதையனின் குடும்பம் அதிரடிப்படையால் கடுமையான கொடுமைகளுக்கும், பாதிப்புகளுக்கும் ஆளான குடும்பம். 1993-ஆம் ஆண்டு முதல் மீசை மாதையன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,அடுத்த சில ஆண்டுகளில் அவரது மகன் மாதேஸ்வரன் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாதையனின் தூக்குத் தண்டனை கடந்த 2014-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தால் கடைசி சில ஆண்டுகளையாவது குடும்பத்தினருடன் கழித்திருப்பார்.

ஆனால், மனித உரிமைகளை மதிக்காமல் அவரை வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறது கர்நாடக அரசு. சிறைக் கைதிகளும் மனிதர்களே. அவர்களின் மனித உரிமைகளும் மதிக்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த மாதையனின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.