ADVERTISEMENT

நண்பனின் காதலியை தவறாகப் பேசியதால் ஆத்திரம்; இளைஞரை அடித்துக் கொன்ற மூவர் கைது 

11:48 AM Jan 01, 2024 | mathi23

இடைப்பாடி அருகே, நண்பனின் காதலியை தவறாகப் பேசியதால் ஆத்திரம் அடைந்த மூன்று பேர், இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள தேவூர் கத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் வேணுகோபால் (22). சொந்தமாக வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி, உள்ளூரைச் சேர்ந்த தனது நண்பர்கள் ஆப்ரஹாம் உள்பட 3 பேருடன் வேணுகோபால் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றிருந்தார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

ADVERTISEMENT

இதனால் அதிர்ச்சியடைந்த வேணுகோபாலின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தனர். ஆனால், மகன் சென்ற இடம் பெற்றோருக்குத் தெரியவில்லை. இந்நிலையில், டிசம்பர் 29ம் தேதி இரவு 10 மணியளவில், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் வினோபாஜி நகரைச் சேர்ந்த வாட்டர் பாலன் என்பவர் மகன் ஆப்ரஹாம் (22), தேவூர் காவல்நிலையம் சென்று, வேணுகோபாலை கல்லால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறி சரணடைந்துள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவரை அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றனர். புளியம்பட்டி மேல்வலவு வாய்க்கால் கரையில் வேணுகோபால் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, நிகழ்விடத்தில் சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், ஆப்ரஹாமிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று கொலையுண்ட வேணுகோபால், அவருடைய நண்பர் ஆப்ரஹாம் உள்பட நான்கு பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது ஆப்ரஹாம், தனது காதலியுடன் செல்போனில் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். இதைப் பார்த்த வேணுகோபால், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே பலருடன் தகாத தொடர்பு உள்ளது என்றும் அந்த பெண்ணைப் பற்றி தவறாகவும் பேசியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஆப்ரஹாமும், உடன் வந்திருந்த அவருடைய நண்பர்கள் பிரசாந்த் (22), நவீன்குமார் (22) ஆகியோரும் வேணுகோபாலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், கீழே கிடந்த கல்லை எடுத்தும் அவரைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். போதை தெளிந்த பிறகு, குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்ட ஆப்ரஹாம், தாமாகவே முன்வந்து காவல்துறையில் சரணடைந்துள்ளார் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் உள்ளூரில் பதுங்கி இருந்த அவருடைய கூட்டாளிகள் பிரசாந்த், நவீன்குமார் ஆகியோரையும் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT