ADVERTISEMENT

 "குழந்தை திருமணம் நடத்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை!" - கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! 

12:27 PM Jun 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துவருகின்றன. அதிலும் குறிப்பாக, கடந்த ஊரடங்கு காலமான ஓராண்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்றுவருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குழந்தை திருமணங்கள் நடப்பதைத் தடுக்கும் பொருட்டு ஊராட்சிகள்தோறும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனிடயே குழந்தை திருமணம் நடத்தினால் அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடப்பது தொடர்பாக புகார்கள் வருகின்றன. அதாவது 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆண் குழந்தைக்கோ திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமணம் செய்வதால் படிக்கும் பருவத்தில் கல்வி அறிவு தடைபட்டு, தன்னம்பிக்கை குறைவு போன்றவை ஏற்படுகின்றன. பாலியல் ரீதியான பிரச்சினைகள், கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஆகியவை ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம் விதவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குழந்தை திருமண தடைச்சட்டம் 2006இன் படி, குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். இந்தக் குற்றம் புரிந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதேபோல 21 வயது நிறைவடையாத ஆண் குழந்தையைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணும் குற்றவாளி ஆவார். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை நடத்தியவர், குழந்தை திருமணத்தை நடத்த தூண்டியவர், குழந்தை திருமணத்தில் கலந்துகொண்டவர்கள், அச்சக உரிமையாளர், மந்திரம் ஓதுபவர், மண்டப உரிமையாளர் உட்பட அனைவரும் குற்றவாளிகள் ஆவர்.

எனவே குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் செயல்பட்டுவரும் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மாணவிகள் அனைவரும் தங்கள் பகுதியில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். மேலும் குழந்தை திருமணம் பற்றிய தகவல்களை இலவச அழைப்பு எண் 1098 மற்றும் தொலைபேசி எண் 04142-231235 என்ற எண்ணிலும் தெரிவிக்க வேண்டும்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT