ADVERTISEMENT

கடைமடைக்கு போகுமா தண்ணீர்; கேள்விக்குறியாக்கும் பாலம்

10:50 PM Jun 17, 2023 | kalaimohan

ADVERTISEMENT

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தடையின்றி தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடைமடை பாசன கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதா என்று கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களுக்கு வந்து ஆய்வு செய்த முதலமைச்சர் கடந்த 12ந் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்து மலர் தூவி வரவேற்றார்.

ADVERTISEMENT

நமது நக்கீரனில் இந்த செய்தி வெளியான போது பிரதான கால்வாய்களில் மராமத்து செய்ய பல இடங்களில் நிதி பெற்றும் கடமைக்கு கண்துடைப்பாக பணி செய்துள்ளதாகவும் தஞ்சை மாவட்டம் ஏனாதிகரம்பையில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரிடம் ரூ. 10 லட்சம் நிதி பெற்று இரும்பு கதவுகள் புதுப்பித்ததாக வைக்கப்பட்ட பதாகையை கூட பொதுமக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக ஆற்றுப்பக்கமாக திருப்பி வைத்திருந்ததை நக்கீரன் இணையம் சுட்டிக்காட்டிய பிறகு பதாகையை அகற்றியதை பெட்டிச் செய்தியாக கொடுத்திருந்தோம்.

முதலமைச்சர் திறந்த தண்ணீர் கல்லணை கால்வாயில் 501 கன அடி எடுத்து இன்று சனிக்கிழமை மாலை ஈச்சங்கோட்டையை கடந்துவிட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் புதுக்கோட்டை மாவட்ட எல்லையை தொட்டுவிடும். நாளை மறுநாள் திங்கட்கிழமை இரவுக்குள் நாகுடி கடந்து கடைசி நீர்த்தேக்கமான மும்பாலை ஏரியை தொட்டுவிடும். அதுவரை கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கூடாது. ஆனால் கல்லணை கால்வாயில் பல இடங்களில் உள்ள சின்னச் சின்ன பழுதுகளை கூட சரி செய்யாததால் மும்பாலை ஏரி வரை குறிப்பிட்ட நாளுக்குள் தண்ணீர் போகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

1935ம் ஆண்டு கட்டப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு நீர்த்தேக்கத்தில் சொர்ணக்காடு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் இரும்பு கதவு உடைந்து நெளிந்து மரக்கட்டையால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதால் பாதி தண்ணீர் சொர்ணக்காடு கிளை வாய்க்காலில் செல்லப் போகிறது. அதே நீர்த்தேக்கத்தில் உள்ள 6 கதவு தடுப்புகள் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் கான்கிரீட் கல் உடைந்து கம்பிகள் துருப்பிடித்து உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் வரும் போது கனரக வாகனங்கள் பாலத்தில் போனால் பாலம் சேதமடையும் ஆபத்தும் உள்ளது. இந்த சின்னச் சின்ன மராமத்துப் பணிகளைக் கூட செய்யாமல் தண்ணீர் எடுப்பதால் என்ன நடக்கப் போகிறதோ?

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, கல்லணைக் கால்வாய் முழுவதும் தண்ணீர் வீணாகாமல் தடுக்க தரை தளம் அமைத்து நீர்த்தேக்கங்களில் உள்ள பாலங்களை புதுப்பித்து கதவுகள் அமைக்க கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் பல வருடமாக தஞ்சை மாவட்டத்தில் ஊரணிபுரம் வரை கூட முடியவில்லை. இந்த ஒப்பந்தத்தில் தான் பாலம், கதவுகளை புதுப்பிக்க வேண்டும். ஆனால் மேற்பனைக்காடு வரை தரை தளம் அமைக்கும் பணி வர இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகும். அதுவரை இப்படித்தான் பழுதான பாலங்களில் தான் தண்ணீரும் வாகனங்களும் போக வேண்டும் என்கின்றனர்.

புதுப்பாலம் அப்புறம் கட்டினாலும் தற்காலிகமாக போர்க்கால அடிப்படையில் மராமத்துப் பணிகளாவது செய்தால் தண்ணீரும் வீணாகாது, பாலமும் சேதமாகாது. மக்களும் அச்சமின்றி போகலாம் என்கின்றனர் விவசாயிகள். இது போல இன்னும் எத்தனை பாலங்கள் சேதமோ?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT