ADVERTISEMENT

கல்வராயன் மலை ஆற்றில் மூழ்கி புதுவை இளைஞர் உயிரிழப்பு!

11:18 AM Jul 30, 2020 | Anonymous (not verified)

உயிரிழந்த கௌதம்
கல்வராயன் மலை நீர்வீழ்ச்சி ஆற்றில் மூழ்கி புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

புதுவை மாநிலம் உழவர்கரை தாலுக்கா ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கௌதம் (41) மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ்குமார், வினோத், பாலாஜி மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த பாரத், ராகுல், கணேஷ், ஏழுமலை ஆகிய 8 பேரும் இரண்டு கார்களில் நேற்று முன்தினம் கல்வராயன் மலை பகுதிக்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். சங்கராபுரம் வழியாக சேராப்பட்டு வந்துள்ளனர். அங்கு இரவு 7:30 மணி அளவில் நண்பர்கள் அனைவரும் ஜாலியாக இருந்துவிட்டு இரவு 9 மணி அளவில் மலையில் உள்ள செருக்கலுர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

அப்போது கௌதம் காரிலிருந்து இறங்கி அருகில் ஓடும் ஆற்றில் இறங்கி எவ்வளவு ஆழம் உள்ளது என்று பார்த்து உள்ளார்.

தற்போது கல்வராயன் மலைப் பகுதியில் அதிக அளவுமழை தொடர்ந்து பெய்து வருவதால் மலையில் உள்ள ஆறுகள் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதைப் போல செருக்கலூர் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டுள்ளது.

கௌதம் ஆற்றில் இறங்கி ஆழம் பார்க்கும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். தங்களது நண்பர் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை அறிந்தும் இருள் சூழ்ந்து இருந்ததால் அவருடன் சென்ற நண்பர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள ஊர்மக்கள் மூலம் சங்கராபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல் கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைராஜ் மற்றும் தனிப்பிரிவுக் காவலர் மோகன் ஆகியோருக்கு தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் நேற்று முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் அப்பகுதி மலை கிராம மக்களும் மலையிலிருந்து ஓடிவரும் செருக்கலூர் ஆற்றில் நீண்ட தூரம் கௌதமை தேடியுள்ளனர்.

இந்த நிலையில் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கூடலூர் ஆற்றுப்பகுதியில் கௌதமின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடலைக் கண்டு அவரது உறவினர்களும் பொதுமக்களும் கதறி அழுதனர். இறந்துபோன கௌதமன் உடலை காவல்துறையினர் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் கல்வராயன் மலையில் செருக்கலுர் நீர்வீழ்ச்சியில் இருந்து ஓடி வரும் ஆற்றில் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் கௌதம் உடல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

கரோனா பரவல் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு இ பாஸ் பாஸ் தேவை என்று அரசும், காவல் துறையும் கூறுகின்றது. கௌதம் மற்றும் அவரது நண்பர்களும் மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்ததோடு விழுப்புரத்திலிருந்து நண்பர்களை அழைத்துக்கொண்டு கல்வராயன் மலைக்கு காரில் எப்படி வந்தனர்? இவர்களுக்கு இ-பாஸ் கொடுக்கப்பட்டிருந்ததா? கல்வராயன் மலைக்கு வாகனங்களில் செல்ல சங்கராபுரம் வழியாகவும், கச்சராபாளையம் வழியாகவும் என இரு வழிகளில் செல்ல முடியும்; ஆனால் இங்கு இரண்டு செக்போஸ்டுகள் இருந்தும் சரியான முறையில் வாகனசோதனைகள் செய்வதில்லை என்று கூறப்படுகிறது. மலையேறும் வாகனங்களில் மதுபானங்கள் எடுத்து செல்லப்படுகிறதா? அவர்கள் எதற்காக செல்கிறார்கள்? என்று தீவிரமாக விசாரித்த பிறகே அனுப்ப வேண்டும். அது போன்று தீவிரமாக விசாரிக்கததால் கௌதம் போன்றவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

எனவே இனியாவது தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கூறுகின்றனர் மலைவாழ் மக்கள். இப்படி வருபவர்கள் பலர் மலையில் சமூகவிரோத செயல்களை செய்து தப்பி ஓடிவிடுவதும் உண்டு இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது எனவே காவல்துறை மலைக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT