ADVERTISEMENT

வாக்களிக்க மறுத்து கறுப்புக்கொடியுடன் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்..!

03:29 PM Apr 06, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட மூன்று கிராம மக்கள் வாக்களிக்கச் செல்லாமல் தேர்தலைப் புறக்கணித்து கறுப்புக்கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. 5 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த கிராமத்தில் வாக்குப்பதிவு துவங்கியிருக்கிறது.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மத்தியூர், மாவித்திருப்பு, வாண்டையார் இருப்பு ஆகிய கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கிராமங்களில் சுடுகாடு வசதி அமைத்துத்தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினரிடம் தொடர்ந்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் அவர்களின் தேர்தல் புறக்கணிப்புக்கான கோபம்.

இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நடந்துவருகிறது. ஆனால், அந்த 3 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணித்து வாக்களிக்கச் செல்லாமல் வீட்டிலேயே காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் கறுப்புக் கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம், "வாக்குப்பதிவு முடிந்ததும் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என உத்தரவாதம் கொடுத்து வாக்களிக்கச் செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அவர்கள் வாக்களிக்கச் சென்றனர். கிராம மக்கள் போராட்டத்திற்குப் பிறகு, சுமார் 5 மணி நேரம் கழித்து 12.30 மணிக்கே வாக்களிக்கச் சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT