
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் வணிகவரித்துறை அமைச்சரும், அதிமுக மா.செவுமான கே.சி.வீரமணி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக மா.செவான தேவராஜ் போட்டியிடுகிறார். "கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக, அமைச்சராக வீரமணி இருந்தும் தொகுதிக்கென பெரிதாக எந்த நலத்திட்டங்களும் செய்ததில்லை. தொகுதியில் பலமாகவுள்ள தனது சாதியான, வன்னியர் சமூக வாக்குகள் தன்னை கறையேற்றிவிடும்"என நம்புகிறார்.
திமுக வேட்பாளர் தேவராஜும்வன்னியர்.அவரது உறவினர்களும் தொகுதியில் இருப்பதால் களத்தில் கடுமையான நெருக்கடியை வீரமணிக்கு தருகிறார் தேவராஜ். இந்நிலையில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் தர முடிவு செய்துள்ளார் அதிமுக வீரமணி. அதே அளவுக்கு திமுக வேட்பாளர் தந்தால் 2,000 ரூபாய் தரவும் முடிவு செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் வீரமணிக்கு சாதகமாக தேர்தல் பணியாற்றிய காவல்துறை அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26ஆம் தேதி தமலேரிமுத்தூர் என்கிற பகுதியில், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு தேர்தல் பார்வையாளர் விஜய் பகதூர்வர்மா என்கிற அதிகாரியும் இருந்துள்ளார். அப்போது வேட்பாளர் வீரமணியின் சகோதரரும், வேட்பாளரின் தலைமை பூத் ஏஜென்ட் அழகிரியும் வந்த காரில், 'அதிமுக வேட்பாளர் வீரமணி', 'முதல்வர் எடப்பாடி', 'இரட்டை இலை' படம் பொறிக்கப்பட்ட டீ-சர்ட்டுகள், துண்டுப்பிரசுரங்கள், கொடிகள் எனக் கட்டுக்கட்டாக இருந்துள்ளன. அதனைப் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யச் சொல்லிவிட்டு பார்வையாளர் சென்றுள்ளார்.
ஜோலார்பேட்டை தொகுதி பறக்கும்படை அதிகாரிகள், ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யச்சொல்லிப் புகார் தந்துள்ளனர். புகாரைப் பதிவு செய்யாமல் காவல்துறை அதிகாரிகள் காலம் கடத்தியுள்ளனர். பின்னர் அழகிரி, கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த பார்வையாளர் விஜய் பகதூர்வர்மா, 'ஏன் வேட்பாளர் பெயரை வழக்கில் சேர்க்கவில்லை?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
'நாங்கள் எழுதி தந்தோம், காவல்துறைதான் வேட்பாளர் பெயரை சேர்க்கவில்லை' எனக் கூறியுள்ளார்கள். இதுகுறித்து காவல்துறை எஸ்.பி விஜயகுமாரை விசாரித்துள்ளார். அவர் காவல்நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு தான், வேட்பாளர் பெயர் இல்லாமல் வழக்குப் பதிவு செய்யச்சொன்னார் எனத் தகவல் கூறியுள்ளனர். இந்தத் தகவல் தேர்தல் பார்வையாளருக்குச் சென்றுள்ளது. இதுபற்றிய அறிக்கையை அவர் தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹுவுக்கு அனுப்பியுள்ளார். உடனடியாக திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை, பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யச்சொல்லி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை சஸ்பென்ட் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)