ADVERTISEMENT

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு ரத்து - தமுஎகச வரவேற்பு

08:17 PM Feb 04, 2020 | kalaimohan

எதிர்ப்பு வலுத்து வந்ததால் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது அரசு. இது குறித்து பள்ளிகல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்த நிலைப்பாடு குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுவதாக தமிழக அரசு காலம் தாழ்த்தியேனும் அறிவித்துள்ளதை தமுஎகச வரவேற்கிறது. அதேவேளையில், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையற்ற மன அழுத்தத்தையும் அச்சத்தையும் உருவாக்கிய தனது செயலுக்கு தமிழக அரசு வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்துகிறது.

'தேசிய கல்விக்கொள்கை 2019' வரைவறிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அது இன்னும் இறுதிப்படுத்தப்படாமலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமலும் உள்ளது. இந்நிலையில் அக்கொள்கையில் இடம்பெற்றுள்ள ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது என்பதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் துடித்தது.

இத்தேர்வு, குழந்தைகளுக்கு உளவியல் சிக்கலை ஏற்படுத்வதுடன், தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரித்து வெவ்வேறு கல்வியை வழங்கிடும் பேராபத்தையும் உள்ளடக்கியது. மெல்லக் கற்கும் மாணவர்களைக் கல்விநிலையங்களை விட்டு வெளியேற்றி இடைநிற்கச் செய்யும் உள்நோக்கத்தையும் காலப்போக்கில் பள்ளிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகி, வீட்டுப்பள்ளி (non schooling) முறையை ஊக்குவிக்கும் முன்னேற்பாட்டையும் கொண்டுள்ளது. எனவே இத்தேர்வினை கைவிடவேண்டும் என்று குழந்தைகள் நலன், கல்வி உரிமை, கல்வி பரவலாக்கம் ஆகியவற்றில் அக்கறையுள்ள அமைப்புகளும் கட்சிகளும் கல்வியாளர்களும் எழுப்பிய கண்டனக்குரலே தமிழக அரசை இந்த நிலைக்கு இழுத்து வந்திருப்பதாக தமுஎகச கருதுகிறது. விழிப்புடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் குரலெழுப்பி தமிழக அரசுக்கு இந்த நெருக்கடியை உருவாக்கிய அனைவருக்கும் தமுஎகச தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது எனக்கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT