ADVERTISEMENT

கோஷத்தை மாற்றிய ஐயப்ப பக்தர்கள்; பரபரப்பை பற்ற வைத்த இரவு நேரம் - கோவையில் பரபரப்பு

03:57 PM Dec 16, 2023 | ArunPrakash

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், சபரிமலையில் இந்த ஆண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சபரிமலை நிர்வாகம் இது தொடர்பாக பக்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். வழக்கமாக டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக் காலத்தின் ஆரம்பத்திலேயே மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், கடந்த 12 ஆம் தேதி காலை 6 மணியளவில் ஆந்திராவில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும்போது, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளனர். உள்ளே சென்ற ஐயப்ப பக்தர்கள், கோவிலின் மூலஸ்தானம் அருகே சென்று கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டுள்ளனர். அப்போது, உள்ளே இருந்த ஊழியர்கள் சிலர், அவர்களை வேகமாக நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால், ஐயப்ப பக்தர்களோ பக்தி மிகுதியால் விலகிச் செல்லாமல், அங்கேயே நின்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கோவில் பணியாளர்கள் ஐயப்ப பக்தர்கள் மீது கைவைத்து தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டுள்ளனர். உடனே அவர்களை கோவில் ஊழியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு சில நிமிடங்களிலேயே முற்றியுள்ளது. அப்போது, ஐயப்ப பக்தர்கள் சார்பில் பேசிக்கொண்டிருந்த சென்னா ராவை கோவில் பாதுகாவலர்கள், மேலே கைவைத்து தள்ளியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ், தங்களை ஏன் தள்ளுகின்றீர்கள் என சத்தமிட்டு கேட்டுள்ளார். உடனே மேலும் ஆத்திரமடைந்த கோவில் பாதுகாவலர்கள் ஒன்று திரண்டு ஐயப்ப பக்தர்களை தாக்கியுள்ளனர். கோவிலுக்குள் இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஐயப்ப பக்தர்களும் பதிலுக்கு தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னரும் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி தந்துள்ளது. அதன் பின்னர், இந்த பிரச்சினை காவல் நிலையம் வரை சென்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது ஒருபுறமிருக்க, அதே தினத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலையை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கோவையில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் எரிமேடு சாலையில் சென்றபோது அவர்களை சபரிமலைக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐயப்ப பக்தர்கள் காவல்துறையினருக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் முழக்கமிட்டுள்ளனர். இதன் காரணமாக, அந்த இடத்தில் திடீர் பரபப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கருதியே அந்த நேரத்தில் தடுத்து நிறுத்தியதாக போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியிருந்தது. சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT