kerla couple stolen gold chain from coimbatore gold shop

Advertisment

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த சுதீஷ் மற்றும் ஷானி தம்பதியினர் நகை வாங்குவதாகக் கூறி அந்த நகைக் கடைக்குள் நுழைந்தனர்.

அப்போது தங்கச் செயின்களை பார்த்துவிட்டு நாளை வருவதாக விற்பனை பிரதிநிதியிடம் கூறிவிட்டு கடையில் இருந்து வெளியேறினர். இதனையடுத்து விற்பனைப் பிரதிநிதி தங்கச் செயின்களை சரிபார்த்தபோது அதில் ஒரு செயின் மட்டும் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்து, கடை மேலாளரிடம் தெரிவித்தார்.

அந்தச் செயினை கடையின் மேலாளர் சோதனை செய்தபோது, சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 32.37 கிராம் எடைகொண்ட தங்கச் செயின் திருடப்பட்டது தெரியவந்தது.இதனை அடுத்து கடையின் மேலாளர் உடனடியாகக் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடையின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

Advertisment

அப்போது சுதீஷின் மனைவி ஷானி விற்பனைப் பிரிவில் தங்கச் செயின்களை பார்த்துக் கொண்டிருந்தபோது தன் கழுத்தில் இருந்த கவரிங் நகை ஒன்றை லாவகமாக மாற்றி வைத்துவிட்டு தங்கச் செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கிராஸ்கட் சாலை பகுதியில் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் கிராஸ்கட் சாலையில் வைத்து கைது செய்தனர். பின் அவர்களிடமிருந்து 32.37 கிராம் கொண்ட தங்கச் செயினை மீட்டனர்.

மேலும் அவர்களை காட்டூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில், இருவரும் பல்வேறு இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தொடர் தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும்,இருவர் மீதும் கேரள மாநிலம் ஆலப்புழா காவல் நிலையத்தில் தங்க நகை திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

Advertisment

இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.