ADVERTISEMENT

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த தடை! எதிர்ப்பு தெரிவித்து கடலுக்குசெல்ல மீனவர்கள் மறுப்பு!

12:02 PM Aug 02, 2019 | kalaimohan

கடலூர் மாவட்ட கடற்கரையோரத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. விசைப்படகு, கண்ணா படகு, பைபர் போட், கட்டுமரம் என 6 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் உள்ளன. இதில் கடலூர் அருகேயுள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சொத்திக்குப்பம், எம்.ஜி.ஆர் திட்டு உட்பட 13 கிராம மீனவர்கள் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். அவ்வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பு மீனவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 29 ம் தேதி பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில் முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 படகுகள் சுருக்கு வலையுடன் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதையடுத்து மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவியதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டிருந்தார். அதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என நேற்று முன் நாள் ஆட்சியர் மறு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சுருக்கு வலையை பயன்படுத்த அனுமதிக்காவிட்டால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டோம் என பெரும்பாலான மீனவர்கள் தெரிவித்தனர்.

கடலூர் துறைமுகம் பகுதியில் நேற்றும், இன்றும் விசைப்படகில் அனுமதிக்கப்பட்ட வலைகளுடன் குறைந்த அளவிலான மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். சுருக்கு வலையை பயன்படுத்தும் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு, எம்.ஜி.ஆர் திட்டு உள்ளிட்ட பல கிராம மீனவர்கள் இன்று நான்காவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதனால் அப்பகுதிகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகு மூலம் கடலில் ரோந்து பணயில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவ கிராமங்களிலும் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT