ADVERTISEMENT

மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடக்கும் இடங்கள்: 2 ஆயிரம் கருப்பு பலூன்கள், ராட்சத பலூன்களையும் பறக்கவிட திட்டம்

07:41 AM Apr 12, 2018 | rajavel



சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக பிரதமர் வருகைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரை வரவேற்கும் பேனர்களுக்கு தலா ஒரு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி போலீஸ் நிலையம் அருகே தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம், கிண்டி கத்திப்பாரா ஆகிய இடங்களில் திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

ADVERTISEMENT

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சைதாப்பேட்டை கலைஞர் பொன் விழா வளைவு அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வேளச்சேரி சின்னமலை பூங்கா அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை சேர்ந்தவர்கள் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையில் உள்ள திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்கள், தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. விமான நிலையம் அருகே கருப்பு கொடியுடன் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய சங்கங்கள், தமிழ் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளும் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுகின்றன. கிண்டியில் 2 ஆயிரம் கருப்பு பலூன்களையும், ராட்சத பலூன்களையும் வானில் பறக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT