ADVERTISEMENT

விசைத்தறி உரிமையாளர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை: செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை

09:35 AM Jan 27, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் அருகே விசைத்தறி பட்டறை உரிமையாளர் மனைவி, மகளுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர முடிவுக்கான காரணம் குறித்து அவர்களின் செல்போன் அழைப்புகளை வைத்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள கோயக்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). அதே ஊரில் விசைத்தறி பட்டறை நடத்தி வந்தார். இவருடைய மனைவி நீலாம்பாள் (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிரீத்தி (21), திருமணமாகி ராசிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். 16 வயதான இளைய மகள் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

மூத்த மகள் பிரீத்தி அன்றாடம் பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். அதன்படி, ஜன. 25ம் தேதி மதியம், பெற்றோருக்கு போன் செய்துள்ளார். பல முறை அழைத்தபோதும் யாரும் செல்போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர், வீட்டின் அருகே உள்ள சித்தப்பா மகன் சரண் என்பவருக்குச் செல்போனில் தொடர்பு கொண்டார்.

இதையடுத்து சரண், பெரியப்பா வீட்டிற்குச் சென்று பார்த்தார். அங்கு மாடியில் உள்ள அறையில் வெங்கடாசலம், நீலாம்பாள், இளைய மகள் ஆகியோர் தூக்கில் சடலமாகத் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உறவினர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். திருச்செங்கோடு புறநகர் காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலங்களைத் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், விசைத்தறி உரிமையாளர் வெங்கடாசலத்திற்கு கடன் தொந்தரவுகளோ, பெரிய அளவில் தொழில் நட்டம் ஏற்பட்டதாகவோ அல்லது மூத்த மகளின் குடும்பத்திலோ எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவம் நடந்த வீட்டில் தேடிப்பார்த்ததில் தற்கொலை குறிப்புகளோ கடிதங்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அவர்களில் யாருக்காவது தீராத உடல் பாதிப்புகள் இருந்ததா, இளைய மகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் இப்படியொரு துயர முடிவை எடுத்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. வெங்கடாசலம் மற்றும் இளைய மகள் ஆகியோரின் செல்போன்களைக் கைப்பற்றி, அதில் பதிவான அழைப்புகளை வைத்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT