ADVERTISEMENT

தபால் வாக்கு முறைகேடு! - அமமுக நிர்வாகி உட்பட மூவர் கைது!

06:50 PM Mar 31, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

மாவட்டக் கலெக்டர்

ADVERTISEMENT

70 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப் பதிவிற்காக வாக்குச் சாவடிக்கு வரத்தேவை இல்லை. அவர்கள் தபால்மூலம் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் மிரட்டப்படலாம். அவர்களின் வாக்குச் சீட்டுகளைப் பெற்று தங்களுக்கு வேண்டியவர்களின் சின்னத்தில் பதிவு செய்யும் சம்பவங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. எனவே, இதுபோன்ற புதிய நடைமுறையை ரத்து செய்து, வழக்கம் போல் வாக்குச் சாவடி வாக்குப்பதிவு முறையைக் கொண்டு வரவேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆணையத்திற்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தன. அந்த சிஸ்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.

இது இப்படியிருக்க, தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்குகளில் நடந்த முறைகேடுகளும், மாயாஜால வித்தைகளும் வீதிக்கு வந்துவிட்டன. அதுவும் தேர்தல் பணிக்காகச் செல்கிற ஆசிரியர்களின் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்ததுதான் விழிகளை விரிய வைக்கிற விஷயம்.

தென்காசி மாவட்டத்தின் தென்காசி சட்டமன்றத்திற்குட்பட்ட தென்காசி கல்வி மாவட்டத்தின் கீழப்பாவூர் சரகத்தின் சுரண்டை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியைப் பணியிலிருப்பவர் சகாய ஆரோக்ய அனுஷ்டாள். இவர் தனது தபால் வாக்கை ஒரு சின்னத்திற்குப் பதிவு செய்து, அந்த வாக்குச் சீட்டினை தனது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்களில் பரப்பியதால் மாவட்டமே அதிர்ந்தது. இதையடுத்து மாவட்டக் கலெக்டரான சமீரன், புகாருக்கு ஆளான ஆசிரியையை தற்காலிகப் பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட, தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாளை தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் தபால் வாக்குச்சீட்டை நான் பெறவில்லை. எனக்கு யாரும் தரவில்லை. எனக்கு ஃபேஸ்புக் கணக்குகள் கிடையாது. யாரோ மர்ம நபர்கள் எனது தபால் ஓட்டைப் பெற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மூலம் தெரிந்து கொண்டேன் என்று மாவட்டக் கலெக்டரிடம் விரிவான புகார் மனுவைக் கொடுத்தவர் தான் நிரபராதி என்றிருக்கிறார்.

ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள், மாவட்டத்திற்குட்பட்ட சங்கரன்கோவில் மெட்ரிக் பள்ளி ஒன்றில் கடந்த 26ம் தேதியன்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அது சமயம் அவர் தனக்கான தபால் ஓட்டுக் கேட்டு முறையாகப் பயிற்சி வகுப்பின் அதிகாரியிடம் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவருக்கு தபால் வாக்குச்சீட்டுத் தரவில்லை. மாறாகப் பயிற்சி வகுப்பின் தேர்தல் அதிகாரியிடமிருந்து வேறு யாரோ உரிய கையொப்பமில்லாமல் ஆசிரியைக்கான தபால் வாக்குச் சீட்டைப் பெற்று பதிவுசெய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர் என்கிற விபரம் பிறகே தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து தென்காசி தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் தாசில்தார் வெங்கடேஷைச் சந்தித்து ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் நடந்தவைகளைத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

அதற்கு அவரோ, சங்கரன்கோவிலில் தபால் வாக்குகள் வழங்கும் போது சிலர் கையெழுத்திடாமலேயே தபால் வாக்குகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். அதனால் நீங்களும் தபால் வாக்குப் பெற்றதாகப் பதிவேட்டில் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல, அவரிடம், நான், தபால் வாக்குச்சீட்டு வாங்கவே இல்லை. எனவே கையெழுத்திட முடியாது என மறுத்திருக்கிறார் ஆசிரியை.

ஆசிரியை விவகாரத்தைக் கிளப்பிய போதுதான் சங்கரன்கோவில் தேர்தல் பயிற்சி முகாமில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்த, கையெழுத்தைப் பெறாமலேயே தபால் வாக்குச் சீட்டுகள் சப்ளை செய்தது, பூதமாக வெளியேறி, பணியாளர்களையும் தொகுதி வேட்பாளரையும் அதிர வைத்திருக்கிறது.

இதனையடுத்தே நடந்தவைகளை விரிவாக மாவட்டக் கலெக்டரான சமீரனிடம் புகார் கொடுத்த ஆசிரியை, சகாய ஆரோக்ய அனுஷ்டாள், நான் நிரபராதி. என்மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றிருக்கிறார். இவருக்கு ஆதரவாகத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திரண்டுள்ளனர்.

இதன்பின் ஆசிரியையின் விவகாரம் போலீசில் புகார் செய்யப்பட அவர்களின் விசாரணையில், 505 என்ற எண் கொண்ட அந்த ஆசிரியையின் தபால்வாக்குச் சீட்டை தென்காசி மாவட்டத்தின் சுரண்டைப் பக்கம் உள்ள வெள்ளக்கால் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் ஆசிரியையான கிருஷ்ணவேனி பெற்றது தெரியவந்திருக்கிறது.

போலீசாரின் விசாரணையில், வாக்குமூலம் கொடுத்த ஆசிரியை கிருஷ்ணவேணி, தனது மகனிடம் வாக்குச்சீட்டு எப்படி இருக்கும் என்பதைக் காண்பிக்க அதனைப் படமெடுத்து தன் மகனுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியதாகவும், மகன் அதை தன் தந்தையும் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியான கணேச பாண்டியனுக்கு அனுப்ப, பின்னர் கணேசபாண்டியன் தனது கட்சியினரின் வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டிருக்கிறார். அக்கட்சியின் நிர்வாகி செந்தில் குமார் அதனைத் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டது வைரலானது என்று தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே ஆசிரியை கிருஷ்ணவேணி அவரது கணவர் கணேச பாண்டியன், அ.ம.மு.க. நிர்வாகி செந்தில்குமார் மூவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் மீது தவறில்லை. அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும். அவரது வாக்குச் சீட்டு எண்ணுக்குப் பதிலாக வரிசை எண் 505 என்று கொடுத்துவிட்டார்கள் அதுதான் தவறு என்கிறார் தென்காசி தேர்தல் அலுவலரான ராமச்சந்திரன்.

திமுக மா.செ.

ஆசிரியர்களின் கையொப்பம் வாங்காமலே அவர்களுக்கு தபால்வாக்குச் சீட்டுக்கள் கொடுத்த மிகப்பெரிய முறைகேடு சங்கரன்கோவிலின் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் முருகசெல்வியின் பொறுப்பில் வருகிற பயிற்சித் துறையில் நடந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கோட்டாட்சியர் முருகசெல்வி, தேர்தல் வெற்றி எதிரணிப்பக்கம் வந்தாலும், நான், தேர்தலில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.வின் ராஜலெட்சுமி தான், என்று சான்றிதழ் கொடுப்பேன். எனக்கு மேலிடத்தில் ஆதரவு உள்ளது என்று அவர் பேசியது வெளியே கசிய, தி.மு.க.வின் தெ.மா.செ.வான சிவபத்மநாபன் கோட்டாட்சியர் முருகசெல்வியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பொறுப்பில் அவர் நீடிக்கக் கூடாது என்று மாவட்டக் கலெக்டரிடம் புகார் செய்திருக்கிறார்.

நாம் இதுகுறித்தும், அதிகாரியே கையெழுத்துப்பெறாமல் தபால் வாக்குச்சீட்டுகள் கொடுத்தது பற்றியும் மாவட்டக் கலெக்டர் சமீரனிடம் கேட்டதில், “நீங்கள் குறிப்பிட்டது நல்ல பாய்ண்ட். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை உண்டு” என்றார். தபால் வாக்குகளில் முறைகேடு. கையெழுத்துப் பெறாமலேயே தபால் வாக்குச்சீட்டுகள் கொடுத்தது போன்றவைகள் தென்காசி மாவட்டத்தில் நடந்தது பதமே. இதைப் போன்ற முறைகேடுகள் வேறு எங்கெல்லாம் நடந்திருக்கிறதோ என்கிறார்கள் தபால் வாக்குச் சீட்டு வேண்டாம் என்று தெரிவித்துவருபவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT