ADVERTISEMENT

சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்! 

06:42 AM Feb 07, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

காட்டூர் ஆனந்தன்

ADVERTISEMENT

சேலம் அருகே கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் காட்டூர் ஆனந்தன் என்கிற ஆனந்தன் (44). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளன. இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். காட்டூர் ஆனந்தன் தன் குடும்பத்துடன் வலசையூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இரவு 9 மணியளவில் ஆனந்தன் தனது மனைவியிடம், காட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச்சென்றார். அவருடன் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரும் சென்றார். உறவினர்களைச் சந்தித்துவிட்டு இரவு 10.30 மணியளவில், வலசையூர் திரும்பிக் கொண்டிருந்தார். காட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை வழிமறித்தது.

இதைக்கண்டு மிரண்டு போன காட்டூர் ஆனந்தன், அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை சாலையோர பள்ளத்தில் இறக்கினார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்த புதருக்குள் விழுந்தார். சுதாரித்து எழுந்த அவர், அங்குள்ள விவசாய நிலத்தின் வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார். ஆனாலும் விடாமல் விரட்டிச்சென்ற கொலைகார கும்பல் அவரை அரிவாள், பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர். 50 மீட்டர் தொலைவுக்கு அவரை விரட்டிச் சென்று கொன்றுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே காட்டூர் ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் பலியானார். உடன் சென்ற பிரபாகரனுக்கும் தாடையில் லேசான காயம் ஏற்பட்டது. காட்டூர் ஆனந்தன் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே கொலை கும்பல் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமண தாஸ் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர். மாவட்ட காவல்துறை எஸ்பி சிவக்குமார், வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி ஆகியோரும் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். காயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டூர் ஆனந்தன் சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காட்டூர் ஆனந்தன் கொல்லப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் வலசையூர், வீராணம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வலசையூர், அரூர் முதன்மைச் சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கொலை நடந்த இடம் மாவட்டக் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், கொலையுண்ட நபர் வசித்து வந்த இடம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட வலசையூர் பகுதி என்பதால் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா தலைமையிலான காவல்துறையினரும் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். காட்டூர் ஆனந்தன் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், அவருக்கு எதிரிகளும் அதிகம். அதனால் பழிக்குப்பழியாக இந்தக்கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொலை கும்பல், காட்டூர் ஆனந்தனின் நடவடிக்கைகளை பல நாள்களாக நோட்டமிட்டு வந்திருக்கலாம் என்றும், அதனாலேயே அவர் இரவு நேரத்தில் தனியாக வருவதை அறிந்து கொலை திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. காட்டூர் ஆனந்தன் ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாடு அருகே வந்தபோது மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது உடன் இருந்த ஆனந்தனின் கூட்டாளி பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலையுண்ட சம்பவம், வலசையூர், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT