ADVERTISEMENT

வாலிபர்களை குறி வைக்கும் போலீஸ்: ராணுவ கட்டுப்பாட்டில் தூத்துக்குடி - தொடரும் பதட்டம்

11:46 AM May 25, 2018 | rajavel



தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் 8 ஐ.ஜி.க்கள், 13 டி.ஐ.ஜி.க்கள், 20 எஸ்.பி.க்கள் இவர்கள் தலைமையில் வெளி மாவட்ட போலீசார் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தூத்துக்குடி டவுன், அண்ணாநகர், பிரையன் நகர், மடத்தூர், ரகமத்துல்லா புரம், தாளமுத்து நகர், திரேஸ்புரம், மாதாகோவில், மீனவர்கள் பகுதிகள் உள்ளிட்ட தூத்துக்குடி பகுதிகளில் உள்ள ரிமோட் பகுதிகளில் செக் போஸ்ட் அமைத்து சோதனையிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த அனைத்து சோதனை சாவடிகளிலும் அதிரடிப்படையினர் காவலுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தவிர தூத்துக்குடி செல்லும் நான்கு புற சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்துள்ளனர். இதன் காரணமாக அந்தந்த பகுதிகளுக்குள் நுழைபவர்களை சோதனையிட்டு விசாரிக்கின்றனர். சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை கைது செய்கிறார்கள்.

ADVERTISEMENT

குறிப்பாக 20 வயது முதல் 35 வயது வரை உள்ள வாலிபர்களை குறி வைத்தே சோதனை மேற்கொள்கின்றனர். இந்த சூழல் தமிழக வரைபடத்தில் தூத்துக்குடி நகரை தனி ஆட்சியான யூனியன் பிரதேசத்தின் நிலைமையையும், கட்டுப்பாடுகளையும் உணர்த்துகின்றன. இதனால் தூத்துக்குடி நகரவாசிகள் பதட்டத்தில் பொழுதை கழிக்கின்றனர்.

இன்று அதிகாலை அண்ணாநகர், பிரைன்நகர், ரகமத்துல்லா புரம், செல்வநாயகபுரம் போன்ற பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஆண்களையும், வாலிபர்களையும் இழுத்துச் செல்கிறார்கள். காரணம், அண்ணாநகரில் டாஸ்டாக் கடை உடைத்து தீ வைக்கப்பட்டதும், குறிப்பாக எஸ்.பி. மகேந்திரனுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் அடிப்படையிலும் அந்த பகுதியை குடைந்து குடைந்து தேடுகின்றனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் இழுத்துச் சென்றுள்ளனர். அவர்களை மீட்பதற்கு வழி தெரியாமல் விழிபிதுங்கும் அப்பகுதி மக்கள், அதிமுகவின் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவான சண்முகநாதனின் அலுவலகம் சென்று, பிடித்து சென்ற தங்களது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவரும் அதற்கான ஏற்பாட்டை செய்வதாக கூறினாராம்.

சூழ்நிலை இப்படி இருக்க பதட்டத்தை தணிக்க 68 பேரை தங்களது சொந்த ஜாமீனில் போலீஸ் வெளியே விட்டுள்ளது. மேலும் போலீஸ் வாகனங்கள், போலீசாரின் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி போலீஸ் உயரதிகாரிகள் ஆணையியட்டுள்ளனர். ஆனால் நிலைமையோ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT