salem district youths goondas act

சேலம் கருப்பூர் அருகே உள்ள தேக்கம்பட்டியில் காமராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. கடந்த 7- ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர், சிலையை அவமதிப்பு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. சிலையை அவமதிப்பு செய்தவர்களைக் கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டமும் நடத்தினர்.

Advertisment

Advertisment

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கருப்பூர் காவல்துறையினர், தேக்கம்பட்டி 13- வது வார்டைச் சேர்ந்த ஏழுமலை மகன் ஆஞ்சி என்கிற சுகவனேஸ்வரன் (27), அசோகன் மகன் அரவிந்தன் (22), குணசேகரன் மகன் சோமு என்கிற வெற்றிவேல் (26) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

காவல்துறை விசாணையில், இவர்கள் மூவர் மீதும் கடந்த 2015- ஆம் ஆண்டு கோயில் திருவிழாவில் சாதி மோதலைத் தூண்டியதாக 2 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து இவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மேற்படி நபர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் நேரில் சார்வு செய்தனர்.