ADVERTISEMENT

“திருட்டுக்கு துணைபோகிறதா காவல்துறை?” – இராணிப்பேட்டை எஸ்.பி மீது அதிமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!  

01:13 PM May 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொழில்நிறுவனங்கள் உள்ளன. இங்கு சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஒரு குடோனை எடுத்து பழைய இயந்திரங்களை வாங்கி அதை புதுப்பித்து விற்பனை செய்துவருகிறார். அந்த கம்பெனியில் மேலாளராக பணியாற்றிவருபவர் முகமது இப்ராஹீம்.


இவர் கடந்த மே 6ஆம் தேதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், சிப்காட் காவல்நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற விவகாரம் பரபரப்பாகியுள்ளது.


இதுப்பற்றி முகமது இப்ராஹீம் நம்மிடம், “மே 6 ஆம் தேதி விடியற்காலை 1.30 மணியளவில் எங்களுடைய குடோன் காவலாளி என்னை செல்போனில் தொடர்புகொண்டு யாரோ சிலர் லாரி, கிரேன் கொண்டுவந்து உள்ளேயுள்ள இயந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு போகிறார்கள் என தகவல் சொன்னார். நான் உடனே என் காரை எடுத்துக்கொண்டு போனேன். அங்கே 10 பேருக்கு மேல் எங்கள் குடோனில் புகுந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சிஎம் செட்டிங் மிஷினை லாரியில் ஏத்திக்கொண்டு இருந்தனர். நீங்க யார் எனக்கேட்டபோது, அவர்களில் 4 பேர் என்னை அடிக்க வந்தார்கள். நான் லாரியை போட்டோ எடுத்தபோது மிரட்டினார்கள்.


காவல்துறையின் 100க்கு தொடர்புக்கொண்டு புகார் சொன்னேன், அவர்கள் வருவதாக சொன்னார்கள். சிப்காட் காவல்நிலையத்தில் இருந்து ஒரு அதிகாரி மட்டும் வந்தார், அங்கு வந்தவரிடம் அந்த கும்பல் பேசியது, அந்த அதிகாரி யாரிடம்மோ பேசினார். உடனே அங்கிருந்து போய்விட்டார். அதன்பின் மிஷினை ஏத்திக்கொண்டு சென்ற லாரியை விரட்டியும் பிடிக்க முடியவில்லை.


இரவில் எனக்கு யாரென்றே தெரியாத ஒரு கும்பல் எங்கள் குடோனின் பூட்டை உடைத்து, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு நாங்கள் வாங்கி வந்து வைத்திருந்த 90 லட்ச ரூபாய் இயந்திரத்தை திருடிக்கொண்டு போகிறது. நான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன் சென்னையில் உள்ளார். புகார் தரச்சொன்னார், புகார் தந்தேன். 90 லட்ச மதிப்பு என்கிறீர்கள் நாங்கள் புகார் வாங்க முடியாது, மாவட்ட குற்றப்பிரிவில் புகார் தாங்கள் என சிப்காட் காவல்நிலையத்தில் கூறினார்கள். மாவட்ட காவல்துறை அலுவலகம் சென்று புகார் தந்தும் இதுவரை விசாரிக்கவில்லை” என்றார்.


இந்த பிரச்சனை குறித்து வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், சேர்மன் சேஷா.வெங்கட்டை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மா.செவும், அரக்கோணம் எம்.எல்.ஏவுமான ரவி, திருடர்களுக்கு பாதுகாப்பு தரும் காவல்துறை என இந்த திருட்டுக்குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புகார் தந்தும் காவல்துறை விசாரணை நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபாசத்தியனிடம் கேட்டபோது, நான் இதுக்குறித்து டி.எஸ்.பியிடம் விசாரிக்க சொல்லியிருந்தேன், என்ன நிலையில் உள்ளது எனக்கேட்கிறேன் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT