ADVERTISEMENT

காவல் மரண வழக்கு: சேலம் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடக்கம்

09:45 AM Jan 27, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவல்துறையினர் சித்ரவதை செய்ததால் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இறந்ததாகக் கூறப்படும் வழக்கில், சேலம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சேலத்தை அடுத்த கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி கம்சலா (40).

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் எல்லையில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாகத் தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் (35) என்பவரை சேந்தமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி திருட்டு வழக்கு தொடர்பாக பிரபாகரன், அவருடைய மனைவி கம்சலா ஆகியோரையும் கைது செய்து, நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.

திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரபாகரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி காவல்துறையினர் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால்தான் பிரபாகரன் இறந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து, சேந்தமங்கலம் எஸ்ஐ சந்திரன், காவலர் குழந்தைவேல் மற்றும் புதுச்சத்திரம் பெண் எஸ்.ஐ. பூங்கொடி ஆகிய மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, சேலம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணன், இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளார். பிரபாகரன் இறந்தது தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை செய்தார். விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கிருஷ்ணனுக்கு உதவியாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் பிரபா, சேலம் சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர்கள் பால்ராஜ், சாரதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கின் முக்கிய ஆவணமாக பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கை கருதப்படுகிறது. அந்த அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை இருக்கும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT