ADVERTISEMENT

விருத்தாசலத்தில் பதுக்கப்பட்ட துபாய் தங்கம் - மடக்கி பிடித்த காவல்துறை

01:32 PM Aug 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த தே.புடையூரைச் சேர்ந்தவர் பாலையா(40). இவர், துபாய்க்கு வேலைக்குச் சென்ற நிலையில் முறையாக வேலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த 14-ஆம் தேதி துபாயிலிருந்து மதுரை விமானநிலையத்திற்கு வந்து, விருத்தாசலம் அடுத்த பேரயலையூரிலுள்ள மாமியார் ராணி(52)யின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் துபாயிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் மற்றும் பார்சல்களை‌ அவரது வீட்டில் வைத்து விட்டு தலைமறைவானார்.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று முன்தினம் 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு கார்களில் வேப்பூர் அடுத்த தே.புடையூரிலுள்ள பாலையா வீட்டிற்கு வந்தனர். அவரது குடும்பத்திடம் துபாயிலிருந்து பாலையாவிடம்‌ வழங்கிய பார்சலை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அதையடுத்து ஊராட்சி தலைவர் பாண்டியன் தலையிட்டு பொருட்களை மீட்டுத் தருவதாகக் கூறினார்.

அதை தொடர்ந்து ஊராட்சி தலைவர் பாண்டியன் மற்றும் பாலையா மாமியார் ராணி இருவரும் மோட்டார் பைக்கில் பேரலையூருக்கு சென்று பொருட்கள், பார்சல்களை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் தே.புடையூருக்கு புறப்பட்டனர். எரப்பாவூர் -‌ தாழநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 4 பேர் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதனால் சந்தேகமடைந்த ஊராட்சி தலைவர் பாண்டியன் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடன் பாலையா வீட்டிற்கு சென்ற போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருவாடானை மாவட்டம், நம்புதாலை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன்(30), அவரது நண்பர்கள் அரியலூர் மாவட்டம், பெரிய காடுவெட்டியைச் சேர்ந்த சின்னராசு(24), திருச்சி மாவட்டம் கல்நாககோட்டையைச் சேர்ந்த விக்னேஷ்(27), திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த சாகுல்ஹமீது(40), விருத்தாசலம் அடுத்த கீணணூரைச் சேர்ந்த செல்வமணி(35) என்பது தெரியவந்தது.

குமரேசன் தங்கம் கடத்தல் புரோக்கராக உள்ளார். கடந்த 14-ஆம் தேதி 100 கிராம் எடையுள்ள 3 தங்க கட்டிகளை பாலையாவிடம் கொடுத்து தனது உறவினர்களிடம் கொடுக்குமாறு வழங்கியுள்ளார். ஆனால் அவரது உறவினர்களிடம் தங்கக் கட்டிகளை பாலையா ஒப்படைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குமரேசன் கடந்த 15-ஆம் தேதி துபாயிலிருந்து வந்தார். இன்னோவா மற்றும் ஈடாஸ் கார்களில் வந்த 9 பேர் பாலையா வீட்டிற்குச் சென்றனர். அதில் 4 பேர் பாலையா மாமியார் ராணியை வழிமறித்து தங்கக் கட்டிகளை எடுத்து சென்றது தெரியவந்தது.


அதை தொடர்ந்து நேற்று பகல் 11:00 மணியளவில் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் இருந்த பாலையாவை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமரேசன்(30), பாலையா(40) உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் தங்கக் கட்டிகளை எடுத்து சென்ற 4 பேரை தேடி‌ வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT