ADVERTISEMENT

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த போலீஸ்!

04:21 PM Jan 31, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் செந்துறை, பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு கிராம மக்களை கதிகலக்கி வந்த இருவர் கைது. செந்துறை அருகே உள்ளது நல்லாம்பாளையம் உஞ்சினி, பரணம், ஆனந்தவாடி. இப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் சாலையில் இரண்டு இளைஞர்கள் ஆள் நடமாட்டமற்ற பகுதிகளில் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் உங்கள் துப்பட்டா சக்கரத்தில் சிக்கி விட்டது, சேலை சக்கரத்தில் சிக்கி விட்டது என்று சத்தம் போட்டு கூறுவார். அதை உண்மை என நம்பிய பெண்கள் திடீரென வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது அவர்கள் முகத்தில் ரசாயன பொடியை முகத்தில் தூவி விட்டு, அவர்கள் கழுத்தில் இருக்கும் தாலி, சரடு, செயின் போன்றவைகளை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விடுவார்கள்.

இது கடந்த ஒரு வாரமாக தொடர் சம்பவங்களாக அந்த பகுதியில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் செந்துறை பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். கடை விற்பனையை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் நல்லாம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இரு இளைஞர்கள் ஸ்கூட்டர் சக்கரத்தில் அவரது சேலை முந்தானை சிக்கி இருப்பதாக கூறி வண்டியை நிறுத்தி உள்ளனர். அவர் வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன் அவர் முகத்தில் ரசாயன பொடியை தூவி விட்டு அவர் அணிந்திருந்த 6 சவரன் நகையை பறித்துச் சென்றனர். இது குறித்து அவர் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர் கொள்ளை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், பாலாஜி, மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் முரண்பாடுகளாக பதில் கூறவே அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள் இருவரும் செந்துறை அருகே உள்ள பூமுடையான் குடிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற பெயரைக்கொண்ட இரண்டு பேரும் சேர்ந்து கடந்த ஒரு வாரமாக குறி வைத்து பெண்களிடம் நகை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ததோடு அவர்களிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 17 சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முந்திரிக்காடுகளை கடந்து ஊர்களுக்கு செல்ல வேண்டும். இவ்வழியே அரசு பணிக்கு செல்லும் செவிலியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் அவரவர் பகுதிகளுக்குச் சென்று வேலை பார்த்து முடிந்து மாலை நேரத்தில் அவரவர் வீடு திரும்பும் நேரம் பார்த்து மேற்படி இரண்டு கொள்ளையர்கள் இருவரும் அவர்களை திசை திருப்பிக் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT