Skip to main content

‘ஊரே தீபாவளி கொண்டாடுது... ஆனா நம்ம குடும்பத்துல நடக்கலயே’- சோகத்தில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்!

 

 the young man involved in the theft in the tragedy

 

திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டன. அப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவரைப் பல நாட்களாக நோட்டமிட்டு புர்கா அணிந்துவந்து கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மன்னார்குடி காமராஜ் நகரைச் சேர்ந்த ரெங்கராஜ் - கிரிஜா தம்பதி, இரவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தனர். கயவர்கள் நள்ளிரவில் கொல்லைப்புற கதவை உடைத்து, கிரிஜாவின் கழுத்தில் இருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்றனர். 

 

அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் நன்னிலம் அருகே உள்ள விசலூரைச் சேர்ந்த பாலமுருகனும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து ஊட்டிக்குச் சுற்றுலா சென்றார்கள். அவர்கள் சுற்றுலா செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டி 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல திருவாரூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த வடிவேல் - கவிதா தம்பதியினர், வேதாரண்யத்திற்கு கவிதாவின் தந்தை இறப்பிற்குச் சென்றனர். அவர்கள் செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அந்த வீட்டிலும் கைவரிசையைக் காட்டினர்.

 

 the young man involved in the theft in the tragedy

 

அதில் 25 பவுன் தங்க நகை, 25 ஆயிரம் பணமும் பறிபோனது. கூட்டுறவு நகரைச் சுற்றி மாவட்ட காவல்படை மைதானம், மாவட்ட காவல் தலைமையகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது என்கிற அச்சம்கூட இல்லாமல் கொள்ளையடிக்கிறார்களே என்பதுதான் கூடுதல் ஆச்சர்யம். இந்த சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த சம்பவமாக நன்னிலம் அருகே மணவாளம்பேட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தையே கடத்திச் சென்ற விவகாரம் மாவட்டத்தையே பூதாகரமாக்கியது. பேருந்து ஓட்டுநர் நன்னிலம் ஆய்வாளர் சுகுணாவிடம் புகார் அளித்தார். அடுத்த நிமிடமே விசாரனையில் இறங்கிய ஆய்வாளர், பேருந்து நிறுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த கண்கானிப்பு கேமராக்களையும், அந்த பேருந்து சென்ற வழிதடங்களை ஆய்வு செய்து, அந்தந்த பகுதி போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

 

தஞ்சை - திருச்சி சாலையில் திருப்பாய்த்துறையில் அந்தப் பேருந்தை அங்குள்ள போலீசார் வளைத்துப்பிடித்தனர். ஆனாலும் பேருந்தைக் கடத்திய நான்கு இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிறகு திருடர்களைப் பிடிக்க நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையில் தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில் திருப்பூரில் பதுங்கியிருந்தவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பேருந்தைக் கடத்திய நான்கு பேரும் இருபத்தைந்து வயதைத் தாண்டாதவர்கள் என்பதுதான் ஆச்சர்யம். இதுபோன்ற சம்பவங்கள் அடங்குவதற்குள் அடுத்த கொள்ளையாக நன்னிலம் அடுத்துள்ள கொல்லாபுரத்தில் நடந்தது. கொல்லாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் 77 வயதான தனபுஷ்பம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பக்க கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் முருங்கை கீரை பறித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

 

 the young man involved in the theft in the tragedy

 

அப்போது வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர் தனபுஷ்பத்தை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்ததில் காயமடைந்த பாட்டியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைக் கேள்விப்பட்ட பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சுகுணா, மருத்துவர்களிடம் பேசி பாட்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கச் செய்ததோடு, அவரிடம் புகார் பெற்று வழக்குப் பதிவுசெய்து அதிரடியாக விசாரணையைத் துவங்கினார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், கீரனூரைச் சேர்ந்த விஜய் என்கிற இளைஞன் கொரியர் கொடுப்பதுபோல, தனபுஷ்பம் பாட்டியின் வீட்டை பலவேடம் அணிந்து நோட்டமிட்டு, இறுதியில் முஸ்லிம் பெண் போல் கருப்பு புர்கா அணிந்து திருடிச் சென்றிருக்கிறார்.

 

நகையைத் திருடிய விஜய் சென்னையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து, நகையை மீட்டு பாட்டியிடம் கொடுத்துள்ளார். பொதுமக்களே பாராட்டும் விதமாக அதிரடியாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சுகுணாவையும் சக காவலர்களையும் மாவட்ட எஸ்.பி.யும், நன்னிலம் டி.எஸ்.பி.யும் பாராட்டியுள்ளனர். கைதான விஜய் திருட்டில் ஈடுபடுவதற்காக, திருடுவது எப்படி என இணையதளத்தில் பார்த்து திருடச் சென்றுள்ளது குறிப்பிடதக்கது. 

 

எப்படி திருடினான், என்ன நடந்தது, எப்படி பிடித்தீர்கள் என பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணாவிடமே கேட்டோம், “கொரியர் போடுற வேலை பார்க்குற அந்தப் பையனோட அப்பாவுக்கு இரண்டு மனைவி, நிறைய பிள்ளைங்க, பாட்டி, தாத்தான்னு குடும்ப மெம்பர்ஸ் அதிகமாம். தீபாவளிக்கு ஊரே புது துணி, பட்டாசோட கொண்டாடுறத பார்த்து, நம்ம குடும்பத்துல நடக்கலயேன்னு வருத்தப்பட்டு, திருடியாவது இதையெல்லாம் செய்யணும்னு முடிவெடுக்குறார். அப்போதான் கொரியர் போடுற மாதிரி வயதான பாட்டி இருக்குற வீட்ட நோட்டமிட்டுள்ளார். ஒரே மாதிரி வந்தா சந்தேகம் வரும்னு யூடியூப்ல திருடுவது எப்படின்னு தேடிப்பிடித்து, அதுல கிடைத்த தகவலின்படி முஸ்லிம் பெண்போல வேடமணிந்து போக முடிவெடுத்து, புர்காவோடு வீட்டிற்குள் புகுந்து நகையைத் திருடியுள்ளார். அக்கம்பக்கத்துல விசாரிச்சா, பெண்ணுன்னுதான் தெரிஞ்சது, ஆனாலும் சிசிடிவிய ஆய்வுசெய்து கண்டுபிடித்தோம்” என்றார்.