ADVERTISEMENT

’இது போலீசார் நடத்தும் நாடகம்’- நீதிபதி ஜெனிதாவின் விளக்கம்

06:01 PM Dec 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1லிருந்து அழுது அரற்றியபடியே வெளியேறி மயங்கி சரிந்தார் அந்த பெண் எஸ்.ஐ.! உடனிருந்த தலைமைக்காவலரும், காவலர் ஒருவரும் மயங்கி சரிந்த பெண் எஸ்.ஐ-யை தூக்கிக் கொண்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்த பின் தான் விஷயம் காவல்துறை வாட்ஸ் அப்பில் வைரலாக வெளியானது.

ADVERTISEMENT

வாட்ஸ் அப் தகவலோ., " ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் - 1 என்ற நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு துறை சார்பு ஆய்வாளர் ஜெனிபா ராணி என்பவர் நீதிமன்ற பணிகளுக்காக காலை 10.00 மணியளவில் வந்துள்ளார்.

உரிய நேரத்தில் நீதிமன்றம் தொடங்கியதும், ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் - 1 நீதிபதி ஜெனிதா என்பவர் சார்பு ஆய்வாளர் ஜெனிபா ராணியை பார்த்து, " உன்னை யாரடி கோர்ட்டுக்கெல்லாம் வர சொன்னது, ஏற்கனவே உன்னோட வேல பார்க்கும் ஆய்வாளர் ஒருத்தி இருப்பாளே..? அவகிட்ட சொல்லிருக்கேன்ல. உங்க வழக்குகளெல்லாம் முருகன் ஏட்டையா வரலைனா, பாக்கமாட்டேனு. அப்புறம் எதுக்குடி இங்க ஏன் கோர்ட்டுக்கு வர. உனக்கெல்லாம் அறிவே இல்லையா..? என்று ஒருமையில் பேசியவுடன் சார்பு ஆய்வாளர் அவமானம் தாங்க முடியாமல் கோர்ட்டுக்குள்ளேயே கண்ணீர் சிந்தி கதறி அழுதுள்ளார். அதை பார்த்து சிறிதும் இரக்கப் படாமல் நீதிபதி ஜெனிதா, "இங்க ஏன்டி அழுகிற..? என்று மீண்டும் திட்டியதோடு இல்லாமல் கோர்ட்டுக்குள் வேலை பார்க்கும் அலுவலர்களை வரச் சொல்லி இவளையும், இவளோடு வந்த எல்லாத்தையும் கோர்ட்ல இருந்து விரட்டுங்க. அப்பதான் நான் எல்லா வழக்குகளையும் நடத்துவேன்." என்று அதிகாரத் தோரணையில் கர்ஜித்துள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சார்பு ஆய்வாளர் குமுறி குமுறி அழுது கொண்டே தலைமை குற்றவியல் நீதிபதியிடம் புகார் அளிக்கச் சென்றவர் தலைமை நீதிபதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே மயக்கமடைந்துள்ளார். CCIW பிரிவில் வேலை பார்க்கும் முருகன் என்ற ஏட்டையா நீதிபதி ஜெனிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் அவரது குழந்தைகளை இவருதான் பள்ளிக்கு அழைத்து செல்வதாகவும், மற்ற அனைத்து வேலைகளையும் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் முருகன் CCIW பிரிவில் சரியாக வேலை செய்வதில்லை என சக போலீஸார் CCIW ஆய்வாளரிடம் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக, CCIW ஆய்வாளர் முருகனை அழைத்து கடுமையாக எச்சரித்து இனிமேல் நீ கோர்ட்டுக்கு போகாதே என்று கூறியுள்ளார். இதனை அப்படியே முருகன், ஜெனிதாவிடம் கூறியுள்ளார். அதன் விளைவு தான் இது."என்றது அந்த தகவல்.

மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருக்கும் எஸ்.ஐ. ஜெனிபா ராணியிடம் பேசினோம். " என்னத்தய்யா சொல்றது..? நானும் ஒரு பெண் என்கின்ற இரக்கமே இல்லை அவங்களிடம்... வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் தான் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும். அதனால் நான் தலைமைக்காவலர் நசுருதீன், காவலர் கார்த்திக்கேயேன் உள்ளிட்டோருடன் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1ல் ஆஜரானோம்.

காலையில் 10 மணிக்கே அங்கே போனதால், என்னை அந்தம்மா பார்த்திருக்காங்க.. நீதிமன்ற ஊழியரை விட்டு என்னை அந்தம்மாவின் சேம்பருக்கு அழைத்து, " நீ ஏன் இங்க வந்த..? உனக்கு அறிவே இல்லையா..? உன்னை யாருடி இங்க வரச்சொன்னா..? எருமை மாடு.." என வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சேர்த்து என்னை திட்டி வெளியே அனுப்பினாங்க.." அசிங்கமாக இருந்துச்சு... இருந்தாலும் வந்த வேலையை முடிக்கனும் என்பதால் அழுகையை அடக்கிக் கொண்டு நீதிமன்றத்தில் காத்து இருந்தேன். சிறிது நேரத்தில் நீதிமன்றத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்தவங்க என்னைய பார்த்ததும், " நீ ஏன் இன்னும் நிற்கிறே.! இங்கேயிருந்து போகலைன்னா அவ்வளவு தான்னு கத்தியதோடு மட்டுமில்லாமல் அங்கேயிருந்த நீதிமன்ற ஊழியர்களை பார்த்து, " இவளை இங்கேயிருந்து போக சொல்லுங்க.. இல்லைன்னா கோர்ட் நடக்காது." என கத்த வேறு வழியில்லாமல் என்னை நோக்கி வந்தவர்கள், " அம்மா.!!! நீங்க கிளம்புங்க.. " என அனுப்பி வைத்தனர். அங்கே இருந்த அத்தனை பேர் முன்னிலையில் அசிங்கப்பட்டேன். இதுக்குறித்து புகார் எழுதும் போது தான் மயக்கமடைந்திருக்கின்றேன்." என்கிறார் அப்பொழுதும் அழுதுகொண்டே..!

ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ மற்றும் 9 போலீஸாரைக் கொண்டு இயங்கி வருகின்றது மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மதுரையில் இருக்கும் டி.எஸ்.பி.தான் தலைமையே..! ராமநாதபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவின் கீழுள்ள அனைத்து வழக்குகளும் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடத்தப்பட்டு வருகின்றது.

ஏறக்குறைய 255 வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் கடந்த 14/06/2019 அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் - 1 நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். அதுவரை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஜெனிதா, அப்பொழுது மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு சார்பிலுள்ள வழக்குகளுக்காக முருகன் எனும் தலைமைக் காவலரே நீதிமன்ற பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இதே வேளையில் 23/09/2019 அன்று இளவேனில் என்பவர் இப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்ற மாற்றலாகி வந்த பொழுதில், ஏற்கனவே நீதிமன்ற பணிகளை செய்து கொண்டிருந்த முருகனை விடுவித்துவிட்டு மணிமாலா எனும் பெண் போலீஸாரை நியமித்திருக்கின்றார் அன்றிலிருந்தே ஆரம்பித்துள்ளது நீதிபதிக்கும், வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்குமான சிறு சிறு பிரச்சனைகள்.

" 2013லிருந்தே எங்களது பிரிவின் நீதிமன்றப் பணிகளுக்கான ஏட்டையாவாக இருப்பவர் முருகன். எனது பணியினை திறம்பட, திருப்தியாக செய்தால் நமக்கு மதிப்பிருக்கும் என்ற அடிப்படையில் எங்களது பிரிவில் இருக்கும் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் முடிக்க ஆர்வம் காட்டினேன். அதற்காக நீதிமன்றத்தில் எமது பிரிவின் செயல்பாடுகளை தினசரி அப்டேட் செய்யுமாறு ஏட்டையா முருகனிடம் கேட்டேன். மதிக்கவேயில்லை.. உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..! என உயரதிகாரி என்கின்ற மரியாதையே இல்லாமல் பேசிவிட்டார். நானும் பேசிப் பார்த்தேன். பலனில்லை. வேறு வழியில்லாமல் ரகசிய அறிக்கை போட வேண்டியதாயிற்று. அதனால் அவரை விடுவித்து நீதிமன்ற பணிகளுக்கு மணிமாலா-வை பயன்படுத்தினேன். முருகன் ஏட்டையா தான் இங்கு பணிகளுக்கு வரனும் என நீதிபதி உத்தரவிட்டதும் எனக்கு தெரியவந்தது. நான் அதனை கடந்து சென்றதால், தீர்ப்புக் கொடுக்க வேண்டிய வழக்குகளுக்கெல்லாம் வாய்தா தேதியினை அறிவித்தார் அவர்." என தன்னுடைய மேலதிகாரிகளுக்கு விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார் சம்பந்தப்பட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவின் ஆய்வாளர் இளவேனில். அவரைத் தொடர்புக் கொண்டோம். பதிலில்லை.

இதனிடையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.ஐ.ஜெனிபா ராணியை சந்தித்த மாவட்ட எஸ்.பி.வருண்குமார் ஆறுதலளித்துவிட்டு, விசாரணையை தொடர்ந்திருக்கின்றார். அதே வேளையில் தன்னுடைய சேம்பருக்கு வணிக குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.ராஜேஸ்வரியை வரவழைத்தும் விசாரணை செய்துவிட்டு பிரச்சனைக்குரிய ஏட்டையா முருகனை மதுரைக்கு இடமாற்றல் செய்துள்ளார் அவர்.

ஒட்டுமொத்த குற்றச்சாட்டு குறித்து நீதிபதி ஜெனிதாவின் கருத்தறிய அவரைத் தொடர்புக் கொண்டோம். அவரோ, " நான் எதுவும் பேட்டிக் கொடுக்கக் கூடாது." என்றவர் தொடர்ந்து, "எனக்கு நேர்மையானவர்களை பிடிக்கும். அந்த வகையில் முருகன் ஏட்டையாவினை மதிப்பேன். மற்றபடி அவர் என்னை காரில் கொண்டு வந்து விடுகின்றார். குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்கின்றார் என வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புகின்றார்கள். இன்னும் 180 கி.மீ.தூரமுள்ள என்னுடைய ஊருக்கு நான் தான் தனியாக காரை ஓட்டிக்கொண்டு செல்வேன். அன்றைய தினத்தில் முடிக்க வேண்டிய வழக்கு இருக்கும் போது சாட்சி அழைத்து வராமல் வெறுமனே வந்திருக்கின்றார்கள். அப்புறம் எதற்கு வரவேண்டும்..? அதனால் தான் அப்படி பேசினேன்.. ஆனால் ஒருமையில் பேசவில்லை. இதுகுறித்து ராமநாதபுர மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்களுக்கு விளக்கக் கடிதத்தை கொடுத்திருக்கின்றேன். இது போலீசார் நடத்தும் நாடகம்." என்றார் அவர்.

இது இப்படியிருக்க, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் எஸ்.ஐ. ஜெனிபாராணியின் துறை எஸ்.பி. விசாரணை நடத்தாமல், சட்டம் ஒழுங்கு எஸ்.பி.எப்படி விசாரணை நடத்தலாம்..? என மாவட்ட எஸ்.பி.வருண்குமாருக்கு எதிராக கருப்புச்சட்டைகள் போர்க்கொடி தூக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- நாகேந்திரன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT