ADVERTISEMENT

“இந்தத் தீர்ப்பு சமத்துவத்தை ஏற்படுத்தாது...” - பா.ம.க. தலைவர் அன்புமணி

04:33 PM Nov 07, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், 10% இட ஒதுக்கீட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். எனினும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் எதிராகத் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்நிலையில், "நூற்றாண்டு கால போராட்டத்திற்குப் பின்னடைவு" என கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இது இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூகநீதி கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இந்தியா சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு. அவற்றைக் களைய வேண்டுமானால் சமூக நிலையின் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமூக நிலைக்குப் பதிலாகப் பொருளாதார நிலையைச் சமூகநீதிக்கான அளவீடாகக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது.

மனிதர்களின் பொருளாதார நிலை என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது ஆகும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகத் தான் இருக்குமேயொழிய சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான சமூகநீதியாக இருக்காது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பட்டியலின, பழங்குடியின, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் நிலையில் அதை போக்குவதற்காக நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றை பா.ம.க. ஆதரிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT