Anbumani twit about Chief Minister MK Stalin's announcement

நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக மாநில ஆளுநர்கள் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர், அம்மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமித்து வருகின்றனர். இந்த நியமனம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் சட்டமன்றக் கூட்டத் தொடரின் வினா, விடை நேரத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., துணை வேந்தர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்; இது தொடர்பாக மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Advertisment

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த அன்புமணி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க சட்டம் இயற்றக் கோரி கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சி. பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் தமிழ்நாட்டின் கல்வி நலனையும், கலாச்சார நலனையும் காக்க முடியும். அந்த வகையில் இந்த சட்டத் திருத்தம் மிகவும் அவசியமாதாகும். அதனால் துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்தை பா.ம.க. ஆதரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.