Skip to main content

“நினைத்தாலே பயமாக இருக்கிறது” - முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Anbumani Ramadoss request Chief Minister should pay special attention on cannabis issue

 

தமிழ்நாட்டில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு காவல்துறையைக் கொண்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்வது, அவர்களின் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 

 

இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகமாகி வருகிறது. அடுத்த தலைமுறையின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மது, சூது, போதை என போய்க்கொண்டிருக்கிறது. ஆன்லைன் விளையாட்டு சூதுவை ஓரளவுக்கு கட்டுப்படுத்த அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. சட்டத்தை முழுமையாக நிறைவேற்றி அதனை கட்டுப்படுத்த வேண்டும். 

 

மாணவர்கள் போதைப் பொருட்களை உபயோகித்துவிட்டு வகுப்புக்குள் அமர்ந்திருப்பதாக ஆசிரியர்கள் நிறையபேர் சொல்கின்றனர். கல்லூரியில் மட்டுமல்ல பள்ளியிலும் இதே நிலைதான். இதையெல்லாம் நினைத்து பார்த்தாலேயே பயமாக இருக்கிறது. குறிப்பாக இந்த கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில்தான் இருக்கும். தற்போது இங்கேயும் எங்கு பார்த்தாலும் சர்வ சாதரணமாக கிடைக்கிறது. செய்தித்தாள்களில் தினமும் 100, 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல், ஐந்து டன் பறிமுதல் என செய்திகள் வருகின்றன. கஞ்சா தற்போது பல வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறது. கஞ்சா சாக்லேட், கஞ்சா பிஸ்கேட், கஞ்சா ஸ்டாம்ப் ஆகிய வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறது. இது அதிகளவில் இருக்கிறது. முதலமைச்சர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நம் எதிர்காலமே நம் இளைஞர்கள் தான். 

 

இந்தத் துறையில் போதுமான காவலர்கள் இல்லை என பலமுறை முதலமைச்சரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும், அறிக்கை மூலமகாவும் சொல்லியிருக்கிறேன். போதை ஒழிப்புப் பிரிவில் கிட்டத்தட்ட 20,000 காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். நிரந்தரமாக இல்லை என்றாலும், தற்காலிகமாக நியமித்து மாநிலம் முழுவதும் அவர்களைக் கொண்டு பெரும் சோதனை நடத்த வேண்டும். அப்படி செய்தால் தான் இளைஞர்களைக் காக்க முடியும். இதனை மிக முக்கியப் பிரச்சனையாக முதலமைச்சர் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.