ADVERTISEMENT

மொட்டை பெட்டிஷன் போடாதீங்க ப்ளீஸ்;பெரியார் பல்கலை துணைவேந்தர் விரக்தி 

11:32 AM Jul 19, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மொட்டை பெட்டிஷன் போடுவதால் பல்கலையின் நற்பெயர் கெடுகிறது என்று பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, நடப்புக் கல்வி ஆண்டுக்கான முதல் வேலை நாள் திங்கள்கிழமை (ஜூலை 18) தொடங்கியது. கல்வி ஆண்டின் முதல் நாள் என்பதால், அனைத்து ஆசிரியர்களுடன் துணைவேந்தர் ஜெகநாதன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆட்சிக்குழு அரங்கில் இக்கூட்டம் நடந்தது. பகல் 3.00 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நடந்தது.

முதல் நாள் என்பதால், துணைவேந்தர் உற்சாகமாக பேச்சைத் தொடங்குவார் என்று எதிர்பார்த்திருந்த ஆசிரியர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டத்தில் துணைவேந்தர் பேசியது குறித்து பேராசிரியர்கள் நம்மிடம் பேசினர். ''பெரியார் பல்கலைக்கு எதிராக நிறைய மொட்டை பெட்டிஷன்கள் போடுகின்றனர். இதனால் பல்கலையின் நற்பெயர் கெடுகிறது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் யார் யார் மொட்டை பெட்டிஷன்கள் போடுகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.


சமீபத்தில், சமூகநீதி கண்காணிப்புக் குழுவினர் இங்கு ஆய்வுக்கு வந்திருந்தனர். அந்தக் குழுவினரிடமும் நிறைய பேர் பல்கலைக்கு எதிராக பெட்டிஷன்கள் கொடுத்து இருந்தனர். பல்கலையில் உள்ள நல்ல விஷயங்கள் குறித்து விளக்கம் அளித்த பிறகு, அந்தக் குழுவினரே ஏன் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட இங்கு பெரிது படுத்துகிறார்கள் என்று வருத்தப்பட்டனர்.

பெட்டிஷன் போடுங்கள். அதிலும் ஒரு வகையில் நல்லது இருக்கிறது. அப்போதாவது, இதுபோன்ற குழுக்களுக்கு பல்கலையின் ரியாலிட்டி என்ன என்பது தெரிய வரும்,'' என்று விரக்தியாக பேசியவர் மெதுவாக, அகடமி சார்ந்த விஷயங்களுக்கு மாற்றினார்.

“ஆசிரியர்கள் அதிகளவில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட வேண்டும். நல்ல புராஜக்ட்டுகளை என்னிடம் சமர்ப்பியுங்கள். என்னுடைய நண்பர்கள் மூலமாக அந்த புராஜக்ட்டுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன்” என்று வழக்கமான அறிவுரைகளையும் சொல்லி இருக்கிறார்.


பேச்சினூடாக அவர் மீதான மற்றொரு விமர்சனத்திற்கும் அந்தக் கூட்டத்தில் பதில் அளித்ததோடு, தன்னுடைய ஆசை ஒன்றையும் வெளிப்படுத்தி உள்ளார். ''வாரணாசியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலேயே என்னை மட்டும்தான் ஆளுநர் பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் நானும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டேன். இதை வைத்து என் மீது வேறு மாதிரியான விமர்சனங்களை சிலர் தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் எல்லோரும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தனர். அங்கு வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோருமே ஹிந்தியில்தான் பேசினர். எனக்கு ஒண்ணும் புரியல. எனக்கு ஹிந்தியில் நாலு வார்த்தைக்கு மேல தெரியாது. அப்போதுதான் ஹிந்தி கத்துக்கணும்னு நினைச்சேன். அடுத்த முறை மாநாட்டிற்கு போகும்போது ஹிந்தியில் பத்து வார்த்தையாவது பேசிடணும். நீங்களும் புதுசா ஏதாவது கத்துக்கோங்க. எப்போதும் ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்துக்கணும்'' என தன்னுடைய ஆசையைச் சொன்னதோடு, மற்ற ஆசிரியர்களையும் ஹிந்தி கற்றுக்கொள்ள மறைமுகமாக ஊக்கப்படுத்தினார்.


துணைவேந்தரின் பேச்சில் ஆரம்பம் முதலே சுரத்து குறைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள் பேராசிரியர்கள். பிறகு, ஆசிரியர்கள் தரப்பில் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. பேராசிரியர் பாலகுருநாதன் பேசுகையில், ''துணைவேந்தர் இங்கு பொறுப்பேற்கும்போது ரொம்பவே உற்சாகமாக இருந்தார். இப்போது நொந்து போய் பேசுகிறார். அது எங்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடிகிறது. பல்கலை தரவரிசையில் முன்னேறியிருக்கிறோம். அதை ஊடகங்கள் வெளியிடுவதற்குள் வேறு என்னென்னவோ நடந்து விட்டது'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


மற்ற ஆசிரியர்கள் வழக்கம்போல் கருத்துகளோ, ஆலோசனைகளோ சொல்லாமல் வேடிக்கை மனிதர்களாகவே மவுனமாக கடந்து சென்றனர். இதையடுத்து பேச ஆரம்பித்த பதிவாளர் (பொறுப்பு) கோபி, ''நம்ம துணைவேந்தர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறார். என்னால் கூட இரவு 9 மணிக்கு மேல் வேலை செய்ய முடியவில்லை. ஆனால் துணைவேந்தர் இந்த வயதிலும் இரவில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.


அனைத்து கோப்புகளையும் உடனுக்குடன் பார்த்து முடித்து, கருத்துகளை தெரிவிக்கிறார். அவருடைய நிர்வாகத்தின் கீழ் நமக்கு 'ஏ பிளஸ் பிளஸ்' அந்தஸ்து கிடைத்திருக்கிறது. பேராசிரியர் குமாரதாஸூக்கு ஓய்வுக்கான பணப்பலன்களை கொடுத்துள்ளார். பணிக்காலமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையெல்லாம் நான் முகஸ்துதிக்காக சொல்லவில்லை'' என்று பேசினார்.


கடந்த ஓராண்டு சாதனைகள் குறித்த பவர் பாயின்ட் விளக்கமும் திரையில் காண்பிக்கப்பட்டது. 'ஏ பிளஸ் பிளஸ்' அந்தஸ்து கிடைத்ததில் துணைவேந்தர் ஜெகநாதன் பங்களிப்பு ஏதுமில்லை என்றும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தாமலேயே அத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் ஸ்லைடுகள் போடப்பட்டதால், ஆசிரியர்கள் தரப்பில் இருந்து நமட்டுச் சிரிப்பு மட்டுமே வந்தது.


ஏற்கனவே கல்வி ஆண்டுக்கு இடையில் பணி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஜெயக்குமார், நடராஜன், தமிழ்மாறன் உள்ளிட்ட சிலருக்கு மீள் பணியாற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது குமாரதாஸூக்கு மீள் பணி வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு ஆசிரியர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அவர், துணைவேந்தருக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி சார்ந்த ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிப்பதால்தான் அவருக்கு மீள் பணி வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியுள்ளது.


அதேநேரம், இந்தக் கூட்டத்தில் துணைவேந்தர் பேசுகையில், ''பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இன்னும் 15 நாள்களுக்குள் இண்டர்வியூ வைத்து விடுவேன். வாங்குகிற சம்பளத்துக்கு என்னால் என்ன முடியுமோ அதைச் செய்வேன்,'' என்று ஆசிரியர்களுக்கு தித்திப்பான சங்கதியையும் பேசியிருக்கிறார்.


அத்துடன், ''நம்மிடம் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதை ஆக்கப்பூர்வமாக வெளிக்கொண்டு வர முடியாமல் தடுமாறுகிறோம். இந்தியாவிலேயே ஒரு மாநில பல்கலைக்கு 'ஏ பிளஸ் பிளஸ்' அந்தஸ்து கிடைத்தது சிறப்பு வாய்ந்தது. இப்போது முதல் இடத்திற்கு இன்னொரு தனியார் பல்கலை வந்துவிட்டது.


எல்லோரும் தரமான பணிகளை வழங்குங்கள். நீங்கள் ஒத்துழைத்தால்தான் நாம் மேலும் மேலும் உயர முடியும்,'' என்ற வேண்டுகோளுடன் பேசி முடித்திருக்கிறார் துணை வேந்தர்.


இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT