ADVERTISEMENT

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% ஒதுக்கக்கோரி மனு! - அரசு பதிலளிக்க உத்தரவு!

04:43 PM Apr 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிக் கடைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், 47 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. குறிப்பாக, உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு 900 தள்ளுவண்டிகள் வழங்கும் சிறப்புத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், 900 தள்ளுவண்டிக் கடைகள் பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் குலுக்கலும் நடைபெற்றது. இந்நிலையில், 900 தள்ளுவண்டிக் கடைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சியை அணுகினர். அப்போது, இதுபோன்று எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனப் பதிலளித்தது மாநகராட்சி. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 900 தள்ளுவண்டிக் கடைகளில் 5 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்தமனுவில், மத்திய அரசின் சிறப்புத் திட்டம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் வழங்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 900 தள்ளுவண்டிக் கடைகளில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு, தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT