ADVERTISEMENT

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய இடங்களில் சோதனை!

04:19 PM Dec 27, 2023 | prabukumar@nak…

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆண்டுகளாக துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் நேற்று (26.12.2023) மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். பெரியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய மூவருடன் இணைந்து பூட்டர் (Periyar University Technology entrepreneurship and Research Foundation) என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அரசு செலவில் அலுவலர்களைப் பயன்படுத்தியது, தனி நிறுவனங்களைத் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தனர்.

ADVERTISEMENT

அதே சமயம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் சேலம் கருப்பூர் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் அறை, அவரது இல்லம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலகம், பதிவாளர் இல்லம் மற்றும் சூரமங்கலம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT