ADVERTISEMENT

மக்கள் புத்திசாலிகளாம்.. இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்! - திமுகவுக்கு எதிரான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ட்வீட்!

10:14 PM Jul 12, 2020 | kalaimohan

ADVERTISEMENT


ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினரையும், எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சியினரையும் விமர்சித்து, ஏதாவது கொளுத்திப் போட்டுக்கொண்டே இருப்பதுதானே அரசியல்?

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு, இது கை வந்த கலை. சர்ச்சைக்குரிய ட்வீட்டால் பறிபோன கட்சியின் மாவட்ட பொறுப்பு திரும்பக் கிடைத்ததும், குஷியாகி மீண்டும் ‘ட்விட்ட’ ஆரம்பித்துவிட்டார்.

‘திட்ட திட்ட திண்டுக்கல்.. வைய வைய வைரக்கல்..’ எனச் சொல்வது போல, திமுகவை எந்த அளவுக்குத் திட்டுகிறாரோ, அந்த அளவுக்கு அரசியலில் ‘வைரம்’ போல பிரகாசிக்க முடியும், என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலும். கட்சித் தலைமையின் மனம் குளிரும் அளவுக்கு, அந்த அரசியல் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்.

அமைச்சரின் லேட்டஸ் ட்வீட் இதோ –

ADVERTISEMENT


"ஒரு அரசாங்கம் எப்படி நடைபெறும் என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாததால்தான், தமிழகத்தின் புத்திசாலி மக்கள் உங்களை 10 வருடங்களாக, உங்களை ஆட்சியில் அமர வைக்கவில்லை. இந்தப் பாடம் படிக்காததால், இன்னும் 5 வருடங்கள் நீங்கள் காத்துக்கொண்டுதான் இருக்கப் போகிறீர்கள். #விஷயமறியா_வாரிசு" இப்படி முடிகிறது அந்த ட்வீட்.

தமிழக மக்களைப் புத்திசாலி ஆசிரியர்கள் ஆக்கி, யாரைக் குறைகூற நினைக்கிறாரோ, அவர்களைப் பாடம் படிக்காத மாணவர்கள் ஆக்கி, வழக்கம்போல் வம்பிழுத்திருக்கிறார்.

இந்த ட்வீட் குறித்து கருத்து தெரிவித்த ஒரு அரசியல் நோக்கர் -

“கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அரசியல் வரலாறு தெரியாமல் இருக்காது. 1967-இல் காங்கிரஸை வீழ்த்திய தி.மு.க., அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரை முதலமைச்சர்கள் ஆக்கி, 21 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. 1996-2001 மற்றும் 2006-2011 என, 10 ஆண்டுகள் அ.தி.மு.க.-வை வீழ்த்தி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடத்தியிருக்கிறது. அப்போதும், தமிழகத்தின் புத்திசாலி மக்கள்தான், இந்த வாய்ப்பை தி.மு.க.-வுக்கு வழங்கினார்கள். தோல்வி கண்ட அந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. பாடம் கற்ற பிறகே, 2011-இல் இருந்து இன்றுவரை (2020) ஆட்சியில் தொடர முடிகிறது. இந்தக் கணக்கு சரியென்றால், தி.மு.க.-வும் 10 ஆண்டுகள் பாடம் கற்று வருவதாகக் கூறுவதில், தவறேதும் இல்லை. அந்தப் பாடத்தை, தி.மு.க. சரியாகக் கற்றுக்கொண்டதா, இல்லையா? என்பது, புத்திசாலி தமிழக மக்களால், 2021-இல் தெரிந்துவிடப் போகிறது. முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் தமிழக மக்களின் கைகளில் இருக்கும்போது, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏன் முந்திக்கொண்டு, தி.மு.க.வுக்கு ‘ஃபெயில் மார்க்’ போடுகிறார்?” என்று கேட்டார்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT