ADVERTISEMENT

'நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சிதான் கடந்த ஆட்சி'-அமைச்சர் சக்கரபாணி தாக்கு!

10:49 PM Aug 02, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள ஓமந்தூரார் எஸ்டேட் கூட்டரங்கில், உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். டிஜிபி ஆகாஷ் குமார், ஆணையாளர் ராஜாராம், இயக்குனர் பிரபாகர், நிர்வாக இயக்குனர் சிவஞானம் உள்பட மண்டல மேலாளர்கள் குற்றப்பிரிவு அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் உள்பட துறைரீதியான அதிகாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை வேளாண்துறைக்கு சொந்தமான மார்க்கெட்டிங் மையத்தில் நெல் சேதாரம் ஆகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டார். அந்த அறிக்கை பார்த்த உடனே கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை போன் மூலம் தொடர்பு கொண்டபோது அங்கே எந்த நெல் மூட்டைகளும் நனையவில்லை என்று தெரிவித்தார். இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையாக விட்டுக் கொண்டிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பாக 92.50 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசிக்கு பதிலாக 9 லட்சம் டன் அரிசி வீணாகிவிட்டது, 92 கோடி ரூபாய் வீணாகிவிட்டது என்று ஒரு தவறான செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையாக விட்டார். அதற்கு தகுந்த பதிலை சொல்லியும் விட்டோம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசி இருப்பு 3 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் தான் இருந்தது. அப்படி இருக்கும் போது 9 லட்சம் மெட்ரிக் டன் வீணாகி விட்டது என்று உண்மைக்கு புறம்பான செய்தியை அறிக்கையாக விட்டார். அதற்கு பதில் அறிக்கை விட்ட பின்பும் கூட வேண்டுமென்றே இதேமாதிரி அறிக்கை விடுகிறார். யார் சொல்லி விடுகிறார் என்று தெரியவில்லை. அவர் தற்போது வகிக்கும் பதவிக்கும், ஏற்கனவே வகித்த பதவிக்கும் இது அழகல்ல.

பத்தாண்டு ஆட்சியில் நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். இன்னைக்கு அறிக்கை விடுகிற முன்னாள் முதல்வர் தன் ஆட்சிக் காலத்தில் நெல் குடோன் கட்டணம் எவ்வளவு என்று அறிக்கை விட்டிருந்தார் என்றால் வரவேற்போம். எப்பொழுது பார்த்தாலும் இந்த ஆட்சியில் நெல் சேமிப்பு குடோன் கட்டவில்லை, பாதுகாப்பு இல்லை என்று அறிக்கை விடுகிறார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு, தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புக்காக தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்கள். அப்படி வந்த பொருட்களை எல்லாம் டோல்கேட்டில் நிறுத்தி ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பிய ஆட்சிதான் கடந்த கால ஆட்சி. எங்க முதல்வரை பொறுத்தவரைக்கும் விளம்பரம் தேவையில்லை. நாங்க எல்லாம் விளம்பரம் கொடுத்தாலும் கால் பக்கம், அறை பக்கம் தான் கொடுப்போம். அவங்க மாதிரி பக்கம் பக்கமா விளம்பரப்படுத்த வேண்டும் என்று எந்தநாளும் எப்போதும் நினைக்க வில்லை'' என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT