ADVERTISEMENT

ரயிலில் நெஞ்சுவலியால் துடித்த பயணி! துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மனிதநேயம்!

10:09 AM Oct 06, 2023 | kalaimohan

ADVERTISEMENT


சென்னையில் இயங்கிவரும் PBTS (Pay back to the Society) அமைப்பைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தென்னிந்திய ரயில்வேயில் Loco Pilot ஆகப் பணிபுரிகிறார். பாபா சாகேப் அம்பேத்கரோட மேற்கோள்தான் - Pay back to the Society. அந்த அமைப்பின் கீழ் செயல்படுபவர்கள், நமது நாட்டில் நமக்கு என்னென்ன கிடைத்ததோ, என்னென்ன பலன்களை நாம் அனுபவித்து வருகிறோமோ, அதையெல்லாம் எதிர்வரும் தலைமுறையினருக்கு திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என பொதுச்சேவையிலும் தங்களை ஈடுபடுத்திவருகிறார்கள்.

ADVERTISEMENT

ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ‘அனுபவம்’ ஒன்றை கருப்பசாமி நம்மிடம் பகிர்ந்தார். “நேற்று (5ம் தேதி) காலை 7 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி செந்தூர் விரைவு ரயிலைக் கிளப்பினேன். என்னுடன் உதவிஓட்டுநராக தம்பி முகில்வேந்தனும், ரயில் காப்பாளராக சுகேந்திரனும் பணிபுரிந்தனர். ரயில் விழுப்புரத்திலிருந்து வேகமெடுத்து, விழுப்புரத்தை அடுத்துள்ள நிலையமான முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தை 110 கி.மீ வேகத்தில் கடந்தபோது, திடீரென்று வேகம் குறைந்தது. ரயிலில் ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்த நான், ரயிலை நிறுத்தி ரயில் காப்பாளரைத் தொடர்பு கொண்டேன்.

காப்பாளர் சுகேந்திரன் என்னிடம் ‘முன்பதிவில்லாப் பெட்டியில் பயணிக்கும் அந்தப் பயணிக்கு வயது 45 இருக்கும். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அதனால் அலாரம் செயினை (ACP - Alarm Chain Pulling) இழுத்திருக்கிறார்.’ என்றார். மேலும் சுகேந்திரன், நிலைய அதிகாரியைத் தொடர்புகொண்டு, பயணியின் நிலைமையை விளக்கி, ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினார். நிலைய அதிகாரி இந்தி பேசும் வடநாட்டவராக இருந்ததால், சுகேந்திரன் கூறியதை புரிந்துகொள்ளவோ, அவசர நிலையை உள்வாங்கவோ முடியாதவராக இருந்தார்.

என்னுடன் இருந்த உதவி ஓட்டுநர் முகில்வேந்தனுக்கு இந்தி தெரியும். அவரை நிலைய அதிகாரியோடு பேசவைத்து, விபரங்களைக் கூறி ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு பண்ணச் செய்தோம். இதற்கிடையில், ரயிலில் பயணித்த பயணிகளில் ஒருவர் மருத்துவராக இருந்தார். அவர் மூலம் தக்க நேரத்தில், அந்தப் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடிந்தது. ஆம்புலன்ஸும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த நபர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகே, ரயிலை சென்னைக்கு கிளப்பினோம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ரயில் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்ற, இங்கே அவரவரும் அவரவருக்கு ஏற்றவகையில் உதவி செய்தது, மனதுக்கு ஆறுதலாக இருந்தது.” என்றார். அந்த ரயிலில் நல்ல மனங்கள் ஒரே இடத்தில் சங்கமித்ததால், ஒரு உயிரைக் காப்பாற்றும் முயற்சியில், அவர்களால் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT