ADVERTISEMENT

“சம்பள உயர்வு, பணிநிரந்தரம் வேண்டும்..” - முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை 

01:22 PM Nov 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகப் பள்ளிகளில் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பாசிரியர் பாடங்களில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியர்களாக 12,327 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களை, தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181ல் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது, "எங்களுக்கு முன்பு உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு சிறப்பாசிரியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை அதே உடற்கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களில் "சர்வ சிக்சா அபியான்" என்ற மத்திய அரசு திட்டத்தில் தமிழ்நாடு அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தியது. அந்த திட்டமானது தற்போது "சமக்ர சிக்சா" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு விட்டது.

இந்தத் திட்டத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் செய்கின்ற பணியும், நிரந்தரப்பணியில் உள்ள சிறப்பாசிரியர்கள் செய்யும் பணியும் ஒன்று தான். கல்வித் தகுதியும் ஒன்று தான். இப்போது 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாங்கள் ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். இதற்காக ஒரு ஆண்டுக்கு 140 கோடி செலவாகிறது. இதை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கினால் புதிதாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஆரம்ப ஊதியத்தில் இந்த 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த முடியும். கல்வி மேம்பாட்டிற்காக இதை ஒரு செலவாகக் கருதக்கூடாது.

12 ஆயிரம் குடும்பம் வாழ தமிழக முதல்வர் ரூ. 300 கோடி நிதியை கூடுதலாக ஒதுக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அமைச்சரவையில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதற்கான முடிவு எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ள பாதிப்பைப் பார்வையிட சிதம்பரம், திருவெண்காடு பூந்தோட்டம் வந்தபோது கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர், முதல்வர் செயலாளர், கல்வித்துறை அதிகாரிகள் அனைவரிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனைப் பரிசீலித்து பணிநிரந்தரம் செய்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும்.” என்றார்.

மேலும், அவர் கூறுகையில், “சமக்ர சிக்சா (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாளர்களைப் போலவே பகுதிநேர ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறோம். இதில் பணியாளர்களுக்கு மட்டுமே 15 சதவீதம் சம்பளம் உயர்த்தி இந்த நவம்பர் மாதம் முதல் வழங்க எஸ்பிடி மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்க இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த ஊதிய உயர்வை உடனே பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் செப்டம்பர் 10ம் தேதி முதல்வர் அறிவித்த பணிமாறுதலை உடனே வழங்க வேண்டும்." என்றும் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT