Skip to main content

சேலத்தில் மூடப்படும் நிலையில் இருந்த தாயார் படித்த அரசுப்பள்ளிக்கு புத்துயிரூட்டிய ஆசிரியை!

சேலத்தில், அம்மா உணவகத்திற்காக மூடப்படும் நிலையில் இருந்த தனது தாயார் படித்து வந்த அரசுப்பள்ளிக்கு புத்துயிரூட்டியிருக்கிறார் பெண் தலைமை ஆசிரியர். 30 குழந்தைகள் படித்து வந்த பள்ளியில் இன்று 380க்கும் மேற்பட்டோர் படிக்கும் பள்ளியாக உயர்த்தி அசத்தியிருக்கிறார்.

 Teacher who gave Revitalized to Government School in Salemஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே, ஊதிய உயர்வுக்காக மட்டுமோ போராடுவார்கள்... குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுப்பதில் அலட்சியம் காட்டுவார்கள்... என்றே பொதுப்புத்தியில் ஓர் அபிப்ராயம் உறைந்து கிடக்கிறது. இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக, மூடப்படும் நிலையில் இருந்த ஓர் அரசுப்பள்ளியை மீட்டெடுத்து, இன்றைக்கு 380க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியாக உயர்த்திக் காட்டியிருக்கிறார் பெண் தலைமை ஆசிரியர் கார்த்திகேயனி (50). 

 Teacher who gave Revitalized to Government School in Salem


 

சேலம் அம்மாபேட்டை பசுபலகுருநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டில் வெறும் 30 குழந்தைகள் மட்டுமே படித்து வந்தனர். ஆண்டுதோறும் இப்பள்ளியின் சேர்க்கையும் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில்தான், 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அம்மா உணவகம் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்காக அப்போது அம்மாபேட்டையில் இடம் தேடிக் கொண்டிருந்த நிலையில், மக்களிடம் வரவேற்பில்லாத பசுபலநாதன் தெரு மாநகராட்சிப் பள்ளியை மூடிவிட்டு, அங்கே அம்மா உணவகத்தைத் திறந்தால் என்ன? என்ற கேள்வி அப்போது அரசியல்புள்ளிகள் முன்வைத்தனர்.

சேர்க்கைக் குறைந்தது மட்டும் காரணம் அல்ல. இரண்டொரு தெரு தள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அதையொட்டி மேலும் சில தனியார் பள்ளிகளும் இருக்கின்றன. அதையெல்லாம் மனதில் வைத்தும் ஆளுங்கட்சியினர் இப்படி ஒரு யோசனையை முன்வைத்திருக்கக் கூடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பசுபலகுருநாதன் தெரு மாநகராட்சித் துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் கார்த்திகேயனி. அதன்பின் அங்கு நடந்த மாஜிக் குறித்து, அவரிடமே கேட்டோம். 

''முதன்முதலில் கடந்த 1988ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். திருமணத்திற்குப் பிறகு, சேலத்திற்கு மாறுதலில் வந்தேன். 2007ல் எனக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. அதன்பிறகு, சேலத்தில் வேறு சில பள்ளிகளில் பணியாற்றிவிட்டு, 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.
 

 

 Teacher who gave Revitalized to Government School in Salem


நான் இங்கு பொறுப்பேற்றபோது 1 முதல் 5ம் வகுப்பு வரை 30 குழந்தைகளும், இரண்டே இரண்டு ஆசிரியர்களும்தான் இருந்தனர். அப்போது இந்தப்பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள், மரங்கள்¢ முளைத்து காடுபோல் காட்சி அளித்தது. கழிப்பறை இல்லை. குழந்தைகள் வெளியில்தான் மலஜலம் கழிக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி எங்களிடம் புகார்கள் வேறு சொல்லிக் கொண்டிருந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேல், குழந்தைகளுக்கு இலவச புத்தகப்பை, சீருடை, பேனா, பென்சில்கள், காலணிகள் என அரசாங்கம் 14 வகையான இலவச பொருள்கள் வழங்குவது பற்றி பொதுமக்களுக்கு அவ்வளவாக விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தது. ஏன் இந்தப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைகிறது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து விட்டோம். இதையெல்லாம் முதலில் நாம் சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச பொருள்கள், திட்டங்கள் குறித்து மக்களிடம் வீடு வீடாகச்சென்று விளக்கினோம். அவர்களையும் பள்ளிக்கு நேரில் வந்து பார்க்குமாறு அழைத்துப் பேசினோம். இதை நானும், உடன் பணியாற்றிய ஆசிரியை(யர்)களும் சேர்ந்து தொடர்ச்சியாக செய்தோம். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது. 2011-2012ம் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை 60 ஆக உயர்ந்தது. இதனால், எங்கள் பள்ளிக்கு மேலும் ஓர் ஆசிரியர் பணியிடம் கிடைத்தது. 

 Teacher who gave Revitalized to Government School in Salemஇடையூறாக இருந்த செடி கொடிகள், மரங்களை அகற்றினோம். அடுத்ததாக, பள்ளி வளாகத்தில் கழிப்பறை கட்டினோம். தொடர்ச்சியாக பெற்றோர்களை நேரில் அழைத்துப் பேசுவதையும், அவர்களிடம் கருத்துகள் தொடர்ந்து மேற்கொண்டதால், அவர்களுக்கும் எங்கள் மீது பெருத்த நம்பிக்கை ஏற்பட்டது. 

பள்ளிக்குள் நுழையும் எந்த ஒரு குழந்தையையும், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாமல் வெளியே அனுப்ப மாட்டோம் என்பதால், தங்கள் பிள்ளைகளுக்கு இங்கே பாதுகாப்பு இருப்பதை உணர்ந்தார்கள். தனியார் பள்ளிகளைப்போல் அன்றாட வீட்டுப்பாடங்களை குழந்தைகளுக்கு டைரியில் எழுதிக் கொடுக்கிறோம். சிலநேரம் வீட்டுப்பாடம் பற்றிய குறிப்புகள் இல்லாவிட்டால், பெற்றோர்களே நேரில் வந்து, ஏன் டைரியில் எதுவும் எழுதவில்லை? என்று கேட்கிறார்கள். இப்படியான கேள்விகள்தான், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் எங்களுக்குமான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது,'' என்றார் கார்த்திகேயனி. 

 Teacher who gave Revitalized to Government School in Salemகடந்த 2016ல் இப்பள்ளியின் மாணவர் சேர்க்கை 200 ஆக அதிகரிக்க, அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கையும் எட்டாக உயர்ந்தது. கூடுதலாக நான்கு கட்டடங்கள்  கட்டவும் அனுமதி கிடைத்தது. 

ஆரம்பத்தில், அம்மாபேட்டையில் அம்மா உணவகம் அமைக்க இடம் தேடியபோது, இந்தப்பள்ளியை மூடிவிட்டு உணவகமாக மாற்ற ஆளுங்கட்சியினர் தரப்பில் பேச்சு எழுந்துள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதன் மூலமே, அரசியல்புள்ளிகளின் இந்த யோசனையை முறியடிக்க முடியும் என கார்த்திகேயனி அப்போதே மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டார். அது மட்டும் காரணம் அன்று; அவருடைய தாயார் கனகரத்தினம் படித்த பள்ளியும் இதுதான் என்பதும், அந்தப்பள்ளியின் மீதான கரிசனத்திற்கு மற்றொரு காரணம். 
 

 

 Teacher who gave Revitalized to Government School in Salem


சில பிரபலமான தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறிய குழந்தைகள் சிலரும்கூட இப்போது பசுபலகுருநாதன் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர். நாம் அப்பள்ளிக்குச் சென்ற நேரத்தில்கூட, அரசு ஊழியர் ஒருவர் தன் குழந்தையை இப்பள்ளியில் சேர்த்துவிட்டுச் சென்றார். 

குழந்தைகளின் உடல்நலனைக் கெடுக்கக்கூடிய தின்பண்டங்களை (ஜங்க் ஃபுட்) முற்றிலும் தடை செய்திருக்கிறார்கள். கையெழுத்துப் பயிற்சி, கணினி பயிற்சி, யோகா பயிற்சி, ஆங்கில பேச்சுப்பயிற்சி, குழந்தைகளின் படைப்புத்திறனை வெளிக்கொணர அறிவியல் கண்காட்சி என அசத்துகிறது, இந்தப்பள்ளி. வருடந்தோறும் தவறாமல் ஆண்டு விழா நடத்தி, குழந்தைகளை கவுரவிக்கின்றனர். இது, பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குழந்தைகளுக்கு கணினி பயிற்சி  அளிப்பதற்காக, பிரத்யேகமாக பயிற்சியாளர் ஒருவரை நியமித்திருக்கின்றனர். அவருக்கான ஊதியத்தை பள்ளி ஆசிரியர்களே தங்களுக்கான சம்பளத்தில் இருந்து  பகிர்ந்து கொடுத்து வருகின்றனர்.

ரோட்டரி சங்கங்கள் உதவியுடன் 3 கணினிகளை ஸ்பான்சர் பெற்றிருப்பதாகச் சொல்லும் தலைமை ஆசிரியர் கார்த்திகேயனி, சங்கங்கள், கொடையாளர்களிடம் இருந்து பள்ளிக்கு வேண்டிய சில உதவிகளைப் பெற்றுத்தருவதில் அவருடைய கணவர் அசோகன் பக்கபலமாக இருப்பதாகவும் சொன்னார். அண்மையில்கூட, கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் குழந்தைகளுக்கான 100 செட் பெஞ்ச், டெஸ்குகளை ஸ்பான்சர் பெற்றிருக்கிறார். 

''நான் இந்தப்பள்ளிக்கு வந்தபோது, ஆசிரியர்கள் அமர்வதற்குக்குட ஒரு பெஞ்ச், டெஸ்க் இருக்காது. இந்த சமூகத்தில் அரசுப்பள்ளிக்கு உதவக்கூடிய எத்தனையோ நல்ல உள்ளத்தினர் இருக்கின்றனர். அவர்களை முறையாகவும், சலித்துக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அணுகும்போதும் குழந்தைகளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யத்தயாராக இருக்கின்றனர். 

இந்தப்பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, குழந்தைகளுக்கான பல வண்ண இருக்கை வசதிகளைக்கூட ரோட்டரி சங்கங்கள் செய்து கொடுத்திருக்கின்றன. 'இங்கு குழந்தைகளையும், பெற்றோர்களையும் நான் எப்படி அணுகுகிறேனோ அப்படித்தான் அனைத்து ஆசிரியர்களும் அணுகுவார்கள். சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாது போயிருந்தால் இந்தப்பள்ளியை மீட்டெடுத்திருக்க முடியாது. 

salem


அதனால்தான் இந்த ஆண்டு, பள்ளியில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்திருக்கிறது. எல்கேஜி வகுப்பில் மட்டும் 82 குழந்தைகளைச் சேர்த்திருக்கிறோம். அரசு இலவச சீருடை வழங்கினாலும்கூட நாங்களே கூடுதலாக ஒரு செட் சீருடை குழந்தைகளுக்கு வழங்குகிறோம். டை, பெல்ட்கூட கொடுக்கிறோம். கூடுமான வரை அதற்கும் ஸ்பான்சர் பெற்று விடுவோம். இல்லாவிட்டால், ஆசிரியர்களே அதற்கான செலவை பகிர்ந்து கொள்கிறோம். இப்போது முதல் தளத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்ததும், குழந்தைகளை புதிய வகுப்பறைகளுக்கு மாற்றி விடுவோம்,'' என்கிறார் தலைமை ஆசிரியர் க £ர்த்திகேயனி.


இப்போது, ஸ்மார்ட் கிளாஸ், கண்காணிப்பு கேமரா போன்ற நவீனமாக்கல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர். 

''ரேஷன் கார்டிலோ, வாக்காளர் பட்டியலிலோ பெயர் இல்லை என்றால் மக்கள் தாமாகவே சென்று அதுகுறித்து விசாரிக்கின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் மீதும் செலுத்தினால், நிச்சயமாக அந்தப்பள்ளியின் குறைகள் களையப்படும். அப்படி, இந்தப்பள்ளியின் முன்னேற்றத்தில் பெற்றோர்களையும் பங்கெடுக்க வைத்தோம். அதனால்தான் 30 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்களுடன் இயங்கிய இந்தப்பள்ளி இன்று 384 குழந்தைகள், 10 ஆசிரியர்களாக முன்னேறியிருக்கிறது,'' என பெருமிதம் பொங்கிடச் சொன்னார் தலைமை ஆசிரியர் கார்த்திகேயனி.

நாம் தலைமை ஆசிரியருடன் பேசுகையில், சக ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசினார். அப்போது சக ஆசிரியர்களான சரளாவும் வசந்தியும், 'நாங்கள்லாம் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றதும், வீட்டு வேலைகளில் மூழ்கிடுவோம். ஆனால் அவரோ, வீட்டுக்குப் போனாலும் பள்ளிக்கூடம் தொடர்பான வேலைகளைத்தான் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டிருப்பார். பள்ளித் தகவல் தொகுப்பு விவரங்களை நள்ளிரவானாலும் அவர் கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட்டுத்தான் தூங்கச் செல்வார்,' என தலைமை ஆசிரியர் கார்த்திகேயனி பற்றி கூறினர்.

அந்த உழைப்புதான், அவருக்கு 2017ல் சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுத் தந்திருக்கிறது. பசுபல குருநாதன் மாநகராட்சித் துவக்கப்பள்ளிக்கு, தூய்மைப்பள்ளி விருது (2018), காமராஜர் விருது (2016) கிடைக்கவும் கர்த்தாவாக இருந்திருக்கிறார். பள்ளிக்கு முன்பு, தனியார் வசம் 980 சதுர அடி காலி நிலம் உள்ளது. கொடையாளர்கள் அந்த நிலத்தை வாங்கிக் கொடுத்தால், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார் தலைமை ஆசிரியர்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...