ADVERTISEMENT

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 'காகிதக் கப்பல்' விடும் போராட்டம்!

06:23 PM Dec 01, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தில் விவசாயிகள், கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கையில், 'காகிதக் கப்பல்' செய்து ஏரியில் விட்டு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடையே அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் கூறுகையில், “அண்மையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இது முற்றிலும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. மேலும் பதுக்கலுக்கும் கள்ளச்சந்தையை ஊக்குவிக்கவும் கார்ப்பரேட் கம்பெனிகளை விவசாயத்தில் கொல்லைப்புற வழியாகக் கொண்டுவந்து இறக்கி, விவசாயத்தில் இரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருங்கால தலைமுறையினரை அழிக்கவல்ல திட்டமாகும்.

மத்திய அரசு, விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை வழங்கி, இந்திய விவசாய விளைபொருட்களை உள்நாட்டுத் தேவைபோக மீதமுள்ளதைக் கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதன் மூலம் நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்யலாம். அதேபோல விவசாயிகளுக்கு இயற்கை உரங்களைக் கொண்டு விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யும்போது இடுபொருட்களின் செலவு, விதைகளின் செலவுகளை மேலாண்மை செலவு, நீர் பயன்படுத்தும் அளவு, கூலியாட்களின் தேவை குறையும்.


கால்நடைகளுக்கும் சத்தான இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நல்ல தரமான தீவனங்களை உற்பத்தி செய்துத் தர முடியும். இவ்வாறு மனிதன் மற்றும் கால்நடைகளுக்கும் எந்தவித நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். இதனையெல்லாம் நடைமுறைப்படுத்தாத மத்திய அரசு, விவசாயிகளைத் திசைதிருப்ப வெறுமனே காகிதத்தில் சட்டம் இயற்றி விவசாயிகளை வஞ்சிப்பது ஆரோக்கியமான போக்கு இல்லை என்பதனை வலியுறுத்தி கோரிக்கைகளை காகிதத்தில் கப்பல் செய்துவிடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றார்.


மேலும், அறவழியில் போராடும் தமிழக விவசாயிகளை தீவிரவாதிகளைப்போல காவல்துறையை மத்திய அரசு ஏவிவிட்டு லத்தியால் அடிப்பது வன்மையாகக் கண்டித்தக்கது என்று கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்திற்கு, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டு, சேனாபதி ஏரியில் காகிதத்தில் செய்த கப்பல்விட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT