Ariyalur arunkumar arrested who cheated for Aavin job

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவருக்கு, துறையூர் அருகே நெட்டவெளம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அதன் மூலம் அவர், ஆவின் நிறுவனத்தில் நிரந்தர வேலை வாங்கித் தருவதாக சோமசுந்தரத்திற்கு ஆசை வார்த்தை கூறி, 58 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளதாக தெரிகிறது.

Advertisment

பணம் கொடுத்த சோமசுந்தரம் வேலை குறித்து கேட்கும்போதெல்லாம், ஏதாவது காரணம் கூறி இன்னும் சில நாட்களில் வேலை வந்துவிடும் என்பதுபோல் அருண்குமார் மழுப்பியுள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் வேலை வராததால், சந்தேகமடைந்த சோமசுந்தரம், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணையைத் துவங்கினர். அப்போது, திடீரென அருண்குமார் தலைமறைவானார்.

Advertisment

அதனால், அருண்குமாரை பிடிப்பதற்கு அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு, தலைமறைவான அருண்குமாரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், திருச்சி, டிவிஎஸ் டோல் கேட் அருகே அருண்குமார் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் அங்குச் சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.