ADVERTISEMENT

தூத்துக்குடி சம்பவத்தின் முக்கிய வழக்கான குற்ற வழக்கு எண் -191ன் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு

08:36 PM Jul 30, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம் - ஏ.எம்.பஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்த போது , தமிழக அரசு தரப்பில் தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக 274 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,43 பேருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாகவும்,250 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 24 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர் எனவும்,கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, கலவர நேரங்களில் காவல் துறையினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான விளக்க கையேடு தமிழக அரசு சார்பில் நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிபதிகள்,

ஒரு இடத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த வேண்டுமெனில் முதன்மை நீதிபதியின் உத்தரவை பெற்று தான் நிகழ்த்த வேண்டும் என நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு தமிழக அரசு வழக்கறிஞர்,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளே துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவை பிறப்பித்தனர். ஏனென்றால் போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினர். அதன் அடிப்படையில்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தமிழக அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

மேலும்,144 தடை உத்தரவு பிறப்பிக்கும் செய்திகள் பொது மக்களுக்கு சென்று சேரும் அளவிற்கு முன்னதாக ஏன் பிறப்பிக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு தமிழக அரசு சார்பில், தூத்துக்குடியில் 100வது நாள் போராட்டம் மே 22ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மே 21ம் தேதி இரவு 8.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வெளியிட்டார்.மேலும், அந்த செய்தி அனைத்து தொலைகாட்சி ஊடகங்கள், நாளிதழ்கள், சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகளை காவல்துறை பதிந்து உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது எனவும், அப்படி விசாரித்தால் வழக்குகளை விரைந்து விசாரிக்க முடியாது எனவும் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அதனை தொடர்ந்து அனைத்து வழக்குகளின் விசாரனையையும் நாளை ஒத்தி வைத்த நீதிபதிகள் நாளைய விசாரனையின் போது தூத்துக்குடி சம்பவத்தின் முக்கிய வழக்கான குற்ற வழக்கு எண் 191 ன் அனைத்து ஆவணங்கள் மற்றும் இணைய தள முடக்கம் சம்பந்தமான மறு ஆய்வு கூட்டத்தின் ஆவணங் களையும் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT