/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tuticorin-coll-art-off.jpg)
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக்குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தல்,சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்திய ஆட்சிப் பணியில் மூத்த அலுவலர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாகத்துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்குத் தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை முறையாகச் செய்யாத ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏரல் வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)