ADVERTISEMENT

மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு! எஸ்.எப்.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்! 

09:59 AM Apr 07, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் சவுடேஸ்வரி கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.எப்.ஐ. இயக்கத்தினர் கல்லூரி முன்பு திடீரென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே சவுடேஸ்வரி கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது ஒரு அரசு நிதியுதவி பெற்று வரும் இருபாலர் கல்லூரி. இக்கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் கடந்த சில ஆண்டாகவே, மகளிர் கல்லூரியாக மாற்றுவதற்கான வேலைகளில் திடீரென்று இறங்கியது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் மகளிர் கல்லூரியாக செயல்படும் என்று கல்லூரி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.), கல்லூரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சவுடேஸ்வரி கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, சேலம் மாவட்ட எஸ்.எப்.ஐ. தலைவர் பவித்ரன் தலைமையில் கல்லூரி முன்பு புதன்கிழமை (ஏப். 6) ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்தின்போது, எஸ்.எப்.ஐ. சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன் கூறுகையில், ''சேலம் சவுடேஸ்வரி இருபாலர் கல்லூரி அரசு உதவிபெறும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டுமுதல் அரசு உதவிபெறும் மகளிர் கல்லூரியாக மட்டுமே செயல்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களின் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


சேலம் மாநகர எல்லைக்குள் மாணவிகளுக்கென அரசு கட்டணத்தில் மூன்று கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனால் மாணவர்களுக்கு குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு இருபாலர் கல்லூரி மட்டுமே உள்ளது. தனியார் கல்லூரிகள் நிறைய இருந்தாலும் கூட, அங்கெல்லாம் படிக்க ஆண்டுக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அதனால் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் கருதி, சவுடேஸ்வரி கல்லூரியை பழையபடி இருபாலர் கலைக்கல்லூரியாக செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இக்கல்லூரி மூலம் ஆண்டுதோறும் படித்து வரும் சுமார் 600 மாணவர்களின் கல்வி பயிலும் வாய்ப்பு பறிபோய் விடும்'' என்றார்.


முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சவுடேஸ்வரி கல்லூரி முதல்வர் கடுமையாக விமர்சித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது கல்லூரி முதல்வருக்கும் எஸ்.எப்.ஐ அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.


இது ஒருபுறம் இருக்க, மகளிர் கல்லூரியாக மாற்றிவிட்டால் எதிர்காலத்தில் இக்கல்லூரியில் ஆண் பேராசிரியர்கள் வேலைவாய்ப்புப் பெற முடியாத நிலையும் உருவாகும் என்கிறார்கள். மகளிர் கல்லூரியாக மாற்றும் முடிவு குறித்து கல்லூரி நிர்வாகம் யாரிடமும் கருத்துகள் கூட கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.


இதற்கிடையே, கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு கூறியதை அடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

எஸ்.எப்.ஐ இயக்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சவுடேஸ்வரி கல்லூரி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT