ADVERTISEMENT

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட மகன்; கதறும் தந்தை 

12:24 PM Jan 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடுப்பு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் வைக்கப்பட்டதால் விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் ஆன்லைன் ரம்மி என்ற வல்லரக்கனுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஸ்ரீரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். விவசாயியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், தன் ஒரே மகனான சிவன்ராஜை மிகவும் பாசமாகவும் செல்லமாகவும் வளர்த்திருக்கிறார். விவசாயம் செய்து வரும் பாஸ்கரன் மகன் சிவன்ராஜ் கேட்டதை எல்லாம் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் வாங்கி கொடுத்து வந்திருக்கிறார். சிவன்ராஜும் நல்ல பிள்ளையாக பி.ஏ. பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார். இன்னும் திருமணமாகவில்லை. நிரந்தர வேலை ஏதும் இல்லாமல் இருந்த சிவன்ராஜ் அவ்வப்போது யாராவது அழைத்தால் தற்காலிக டிரைவராக செல்வது வழக்கம். அதன் மூலம் வரும் வருமானத்தாலும், அவ்வப்போது தந்தையிடம் பெற்று வந்த பணம் சிவன்ராஜ் கைகளில் பணப்புழக்கம் இருந்துள்ளது.

வேலையில்லாமல் பொழுது போக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஆப்களை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் ரம்மி விளையாடியிருக்கிறார். முதலில் ஆன்லைன் ரம்மியில் சில ஆயிரங்கள் பணத்தை வென்றிருக்கிறார். இதுவே காலப்போக்கில் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். ஆன்லைன் ஏற்றமும் இறக்கமுமாக இருந்துள்ளது. இதனால் கைகளில் பணப்புழக்கம் குறைய தந்தையை மிரட்டி 20 ஆயிரம், 10 ஆயிரம் என அவ்வப்போது தனக்கு இருக்கும் கடன் என்றும் அதை அடைக்க வேண்டி இருப்பதாகச் சொல்லி அவரிடமிருந்து பணம் வாங்கியுள்ளார் சிவன்ராஜ். அவ்வாறு பெற்ற பணத்தை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழந்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் 3 ஆயிரம் செலுத்தி விளையாடியதில் 7 லட்சம் கிடைக்க, மேலும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நண்பர்களிடம் கடன் வாங்கியும், ஆன்லைன் நிறுவனத்தில் கடன் பெற்றும் 7 லட்சத்தை 2 மடங்காக மாற்ற நினைத்த சிவன்ராஜ்., முந்தைய வெற்றியின் நம்பிக்கையில் 14 லட்சம் கட்டினால் 28 லட்சம் கிடைக்கும் என தன்னுடைய ரம்மி விளையாட்டில் 14 லட்சத்தையும் தான் வழக்கமாக ரீசார்ஜ் செய்கிற கிராமத்தில் உள்ள கடைகளின் மூலம் ஆன்லைன் கணக்கில் ரீசார்ஜ் செய்து விளையாடியதில் 14 லட்சமும் இழந்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறமிருந்தாலும், அதற்காக வாங்கப்பட்ட கடனுக்கான நெருக்கடி மேலும் சிவன்ராஜுக்கு ஏற்பட்டுள்ளது. "தனக்கு கடன்கள் இருக்கின்றன அதனை அடைக்க பணம் வேண்டும். பணம் தரவில்லை என்றால் என்னை உசுரோட பாக்க முடியாது" என்று தன் தந்தையிடம் சிவன்ராஜ் கூறியுள்ளார்.

தனது ஒரே மகன் விபரீதமாக ஏதாவது செய்துகொள்ளக்கூடாது என்ற பயத்தில், தந்தை தன் சொத்தை விற்று மகன் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கிறார். அன்றைய தினம் அதை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் ஒரே இரவில் ஒரு லட்சத்தை இழந்திருக்கிறார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்தார் சிவன்ராஜ். மேலும் ரம்மி விளையாட ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடன் 5 லட்சம் திரும்பச் செலுத்த வேண்டிய அழுத்தம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்திருக்கிறார் சிவன்ராஜ். மகன் ஏதாவது செய்துவிடக்கூடாது என பயந்துபோன பெற்றோர் அவரைச் சமாதானப்படுத்தியதோடு, இருக்கும் தங்களின் ஒரே சொத்தை விற்று ரம்மி விளையாட்டிற்காக ஆன்லைன் நிறுவனத்தில் பெற்ற கடனை அடைத்திருக்கிறார்கள். ஆனாலும் ரம்மியில் இழந்ததை ரம்மி விளையாடியே பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சம்பவத்திற்கு முதல் நாள் கையிலிருக்கும் 70 ஆயிரத்தை ரீசார்ஜ் செய்து சிவன்ராஜ் ரம்மி ஆடியதிலும் பணத்தை இழந்திருக்கிறார்.

ஒட்டு மொத்தமாக பணத்தை இழந்த சிவன்ராஜ் விரக்தியில் நண்பர்களிடம் வாங்கிய கடன், தன் பெற்றோர்களின் சொத்தும் காலியானதை எண்ணி மனம் உடைந்து போன சிவன்ராஜ் ஜனவரி 10 ஆம் தேதி பெற்றோரிடம் இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு இரவு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. மறுநாள் காலையில் வீட்டருகே உள்ள தோட்டத்தில் மயங்கிக் கிடந்த சிவன்ராஜை பார்த்த அங்குள்ள விவசாயிகள் அவரை மீட்டு பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த பணகுடி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் இழந்துள்ள சிவன்ராஜ் விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

"ஒரே பிள்ளைங்குறதால அவன் கேட்ட நேரமெல்லாம், அவன் மனசொடஞ்சி போயிறக் கூடாதுன்றதுக்காக பணம் குடுத்தேன்யா. பணம் குடுக்கலன்னா மிரட்டுவான். கடன் இருக்கு அடைக்கணும்னான். கடைசியாக ஒரு லட்சம் கொடுத்தேன். சொத்த வித்து அவனுக்கு மட்டும் 15 லட்சம் கொடுத்தேன். இப்படி ஆகும்னு நினைக்கலியே. ரம்மி ஆட்டத்தில எல்லாம் போய், மகன் உசுரு போய், இப்ப நடுத்தெருவுக்கு வந்துட்டோம்யா" என மகனை இழந்த துக்கமும் வேதனையுமாக கூறினார் சிவன்ராஜ் தந்தை பாஸ்கரன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT