ADVERTISEMENT

தமிழை ஆட்சி மொழியாக்க கோரி முதியவர் மவுன போராட்டம்!

04:01 PM Jun 02, 2018 | Anonymous (not verified)



தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முத்துசாமி என்ற முதியவர் 70 நாட்களுக்கும் மேலாக மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திருப்பூர் மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி (80). இவர் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 70 நாட்களாக மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முத்துசாமி மவுன போராட்டம் குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமியிடம் கேட்டபோது,

எனது கணவர் மவுனப் போராட்டம் நடத்துவது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத்தான். இன்றைய தலைமுறையினரிடம் தமிழில் பேசவும் எழுதவும் தடுமாற்றம் உள்ளது. பள்ளிகளில் முறையான தமிழ் கல்வி இல்லாமையே இதற்கு காரணம். வீடுகளில் தமிழில் பேசுவதில் தொடங்கி எழுதுவது வரை தமிழ் எளிமையாக வர வேண்டும். அந்த அளவிற்கு தமிழை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சுப்புலட்சுமி சொல்லிய கருத்தை ஆமோதிக்கும் வகையில் முத்துசாமி தலையசைத்தார். 7-ம் வகுப்பு வரை படித்த முத்துசாமி, பின்னலாடை தொழிலில் இயற்கை முறையில் சாயமிடும் தொழிலில் வெற்றி கண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரி தமிழ் அறிஞர்கள் டெல்லியில் நடத்திய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். தமிழகம் தலை நிமிர தமிழ் மொழி கல்வியே வழி வகுக்கும் என மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT